பதிவு செய்த நாள்
02
நவ
2020
10:11
திண்டுக்கல்:திண்டுக்கல் -- மதுரை மாவட்டங்களின் எல்லையில் நிலக்கோட்டை அருகே எஸ்.மேட்டுப்பட்டியில் அமைந்துஉள்ளது சித்தர் மகாலிங்கம் மலை. 2100 அடி உயரத்தில் அடர் வனம், அதிக பாறைகளைக் கொண்ட இம்மலையில் உள்ள சமணர் குகைகள், படுகைகள், ராமாயண அடையாளங்கள், வற்றாத சுனைகள் போன்ற வரலாற்று சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
சித்தர்மலை தல வரலாறு: இங்குள்ள கோயிலின் மூலவர் சிலை 1000 ஆண்டுகள் பழமையானது. கோயில் 1487 ல் கட்டப்பட்டது. மலையடிவாரத்தில் கம்பளத்து நாயக்க மன்னர் மல்லிகா அர்ஜூனன் இப்பகுதியை ஆண்டார். அவரது மாடுகள் மலைக்கு மேயச் செல்வது வழக்கம். மலைஏறும் போது பசுக்களின் மடி நிறைந்தும், கீழிறங்கும் போது வற்றியும் காணப்பட்டது.நாயக்கர் பின்தொடர்ந்து சென்றபோது, பசு தானாக பால் கறந்துள்ளது. அதை நோக்கி கம்பை வீச, மாடு மற்றும் சுயும்புலிங்கத்தின் மீதும் கம்பு பட்டதும் நாயக்கர் கண்களில் பார்வை பறிபோனது. அவர் இறைவனை வேண்ட, சிவபெருமான் காட்சி தந்து இங்கு எனக்கு கோயில் எழுப்பு என்றதால் கோயில் உருவானதாக கூறப்படுகிறது. இதனால் மூலவருக்கு மல்லிகார்ஜூனா லிங்கம் என்கிற பெயர் வந்தது.
தமிழ் பிராமி எழுத்துக்கள்: மலையின் மேற்கு பக்கம் குகைகள், கற்படுக்கைகள் உள்ளன. 1908ல் கற்படுகைகளில் தமிழ் கல்வெட்டுக்கள், 1980 க்கு பிறகு குகைதளத்தின் நெற்றிப் பகுதியில் மதுரை எனப் பொறித்த கல்வெட்டு கண்டறியப்பட்டது. தமிழ் பிராமி கல்வெட்டுகள் அழகர் கோயில் கிடாரிபட்டியிலும், அடுத்து இந்த சித்தர்மாகாலிங்க மலையிலும்தான் உள்ளது.
சமணர் படுக்கைகள்: குகைத் தளத்தில் 11 கல்வெட்டுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் தலையணை பகுதியில் தமிழ் பிராமி எழுத்துகள் உள்ளன. இவை 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இப்பகுதியில் இருந்தவர்கள் சமணத் துறவிகளுக்கு உதவியுள்ளதை "திடி இல் அதன்" என்ற கல்வெட்டின் மூலம் அறியலாம். இதையடுத்தே உசிலம்பட்டி அருகே திடியன் என்னும் ஊர் இன்றும் உள்ளது.
வற்றாத சுனைகள்: மலையில் கற்பூர தீர்த்தம் என்ற பெயரில் நீர்ச்சுனை ஒன்று அமைந்துள்ளது. ஒரு காலத்தில் நகரெங்கும் தண்ணீர் பஞ்சம் நிலவியபோது இங்கு மட்டும் நீர் இருந்ததாகவும், பொதுமக்கள் அதைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. கோயிலுக்கு பின்புறம் பெரிய மலைப் பாறையில் தீபம் ஏற்றுவதற்கான பெரிய விளக்கு போன்று அமைக்கப்பட்டுளளது. கார்த்திகை தீபத்தன்று இங்கு ஏற்றப்படும். அது பல கிராமங்களுக்கு தெரிவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மலையைச் சுற்றிலும் ஆமணக்கு, தங்கமரக்காய், வாதனாரி, ஓமவள்ளி போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்ட மூலிகைகள் உள்ளன.
சுற்றுலா தலமாக்கலாம்: இம்மலையில் ஆந்தையர், மகரிஷி சித்தர்கள் இங்கு வாழ்ந்துள்ளனர். அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது அருகிலுள்ள சித்தர்கள் நத்தம் எனும் ஊர். இங்கு விேஷச நாட்கள் தவிர வேறுநாட்களில் யாரும் வருவதில்லை. காதல் ஜோடிகள், நண்பர்கள் கூட்டம் உலவும்போது, வரலாற்று பொக்கிஷங்களின் மதிப்பறியாமல் தங்கள் பெயர்களை பதித்து பாழாக்குகின்றனர். வரலாற்று சுவடுகள், வற்றாத சுனை, பழமையான கோயில் என பல சிறப்புகளை கொண்டுள்ள சித்தமகாலிங்க மலையை அருமையான சுற்றலா தலமாக்கலாம். மலையைச் சுற்றிலும், அழகிய தோப்புகள் ஆறுகள், அணைப்பட்டியில் காண்போரை கவரும் வைகை ஆறு என எழில்மிகு பகுதியாக இருக்கிறது.மலைமீது நின்று பார்த்தால் வைகையாறு அணைப்பட்டி வரை பல கி.மீ.,க்கு பாம்பாய் நெளியும் அழகை காணக் கண்கோடி வேண்டும். தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் கூறியதாவது: இங்கு 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமணர்கள் வாழ்ந்து, பொது மக்களுக்கு போதித்ததற்கான சான்றுகளை கல்வெட்டுகளால் அறியலாம். கல்வெட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மதுரை கிடாரிப்பட்டியில் உள்ளது போன்று தமிழ் பிராமி எழுத்துக்களில் இடம் பெற்றுள்ளன.
தொல்லியல் துறையில் கல்வெட்டுகள்: பூசாரி திருநாவுக்கரசு கூறியதாவது: அந்தக் காலத்தில் கோயிலை நிறுவிய மன்னர்கள் இதனை பாதுகாக்கவும், பராமரிக்கவும் எங்களிடம் ஒப்படைத்துச் சென்றனர். சிரமத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக நிலங்களை தானமாக வழங்கி சென்றுள்ளனர். இன்றைய தலைமுறை வரை நாங்கள் லிங்கத்தை பூஜித்து வழிபட்டு வருகிறோம்.இங்குள்ள கல்வெட்டுகள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது குறித்து பலரும் ஆய்வு செய்து சென்றுள்ளனர்.
சிவன் நேசித்த மலை: அழகு பொன்னையா கூறியதாவது: சதுரகிரி மலைக்கு அடுத்தாற்போல் சிவன் நேசித்த மலையாகும். இங்கு இறைவன் அழைத்ததால் சிவபணியாற்றுகிறேன். படிகள் அமைத்து அதற்கான வேலைகள் தொடங்கி நடந்து வருகிறது. இங்கு பல்வேறு மூலிகை செடிகள் உள்ளன. அது சித்தர்கள் வாழ்ந்தற்கான அடையாளத்தை காட்டுகிறது.
போற்றி பாதுகாக்கும் பொக்கிஷம்: ராமசாமி கூறியதாவது: இங்குள்ள கற்படுகைகள் உள்ள குகைகள் பஞ்சபாண்டவர் குகை என பொதுமக்களால் அழைக்கப்படுகிறது. ராமர் பாதம், குகை, சுனை போன்றவற்றில் பொதுமக்களில் சிலர் தங்களின் பெயர்களை எழுதுகின்றனர். இது போற்றி பாதுகாக்க கூடிய பொக்கிஷம் ஆகும்.