பதிவு செய்த நாள்
06
நவ
2020
10:11
திருப்பதி: திருப்பதி அருகே உள்ள ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகச் செல்ல, திருமலை தேவஸ்தானம், பக்தர்களுக்கு அனுமதி வழங்கிஉள்ளது.
திருமலைக்கு செல்லவும், ஏழுமலையானை வழிபடவும், தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே, தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், ஊரடங்கில் ஏற்பட்ட தளர்வுகளுக்கு பின் துவங்கப்பட்ட ஏழுமலையான் தரிசன சமயத்தில், வேண்டுதல் உள்ள பக்தர்களின் வசதிக்காக, அலிபிரி நடைபாதை வழியாக மட்டும் செல்ல அனுமதி வழங்கப் பட்டது. தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே நடைபாதை மார்க்கத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஸ்ரீவாரிமெட்டு மார்க்கம், அடர்ந்த வனப் பகுதிக்கு அருகே அமைந்துள்ளதால், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. எனவே, அந்த வழியாக பக்தர்கள் செல்ல, தேவஸ்தானம் தடை விதித்தது. தற்போது, பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், வனவிலங்குகளின் நடமாட்டம் குறைந்து உள்ளது. இதையடுத்து, வனத் துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் அந்த வழியாக நடந்து ஆய்வு மேற்கொண்டனர்.இதைத் தொடர்ந்து, எட்டு மாதங்களுக்குப் பின், நேற்று முதல், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் பக்தர்கள் செல்ல தேவஸ்தானம் அனுமதி அளித்துஉள்ளது.தற்போது மழைக்காலம் என்பதால், காலை, 6:00 முதல், மாலை, 4:00 வரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படும் என, தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.