பதிவு செய்த நாள்
07
நவ
2020
02:11
செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவில், நரசிம்ம பெருமாள் கோவில், ராஜகோபுர திருப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. செங்கல்பட்டு அடுத்த, சிங்கபெருமாள்கோவிலில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், பல்லவர் கால குடைவரை கோவிலாகும். இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இங்கு, மூலவர், வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டபடி, சங்கு சக்கரத்தை ஏந்திய நிலையில் உள்ளார். வலது கையை அபயகரமாகவும், இடது கையை தொடை மீது வைத்த நிலையிலும், நெற்றிக்கண் கொண்டு, கிழக்கு நோக்கி அமர்ந்து உள்ளார்.இக் கோவிலில், ராஜகோபுரம் இல்லாமல் இருந்தது. இதை கட்டித்தர, ஹந்து சமய அறநிலையத் துறை மற்றும் அரசிடம், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், முதலியாண்டான் சுவாமிகளின், தாசரதி டிரஸ்ட் மூலம், 1 கோடி ரூபாயில், ராஜகோபுரம் கட்டித் தர, 2015ம் ஆண்டு, முன் வந்தனர்.இதற்கு, ஹிந்து சமயஅறநிலையத் துறை அனுமதி அளித்தது. கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் கட்ட, நிர்வாகம் முடிவு செய்தது. அதே ஆண்டு, அக்., மாதம், பணிகளை துவக்கியது. பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. தற்போது, கொரோனா காலத்திற்கு பின், கோபுர பணிகள் தீவிர மாக நடந்து வருகின்றன. இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், ராஜகோபுர திருபணிகள் முடியும் தருவாயில் உள்ளது. கோவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன், கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.