கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் துவக்கிய பக்தர்கள்
பதிவு செய்த நாள்
17
நவ 2020 12:11
திருப்பூர்:கார்த்திகை மாதம் பிறந்ததால், மண்டலபூஜை விரதம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள், குருசாமி மூலமாக, மாலை அணிந்து விரதம் துவக்கினர்.கார்த்திகை துவங்கி, தை முதல் நாள் மகரஜோதி வழிபாடு நடக்கும் வரை, ஐயப்ப தரிசனத்துக்காக, லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்கின்றனர். திருப்பூர் நகரம், கொரோனா ஊரடங்கில் முடங்கியிருந்த நிலை முற்றிலும் மாரி, மீண்டும் பழைய பரபரப்பை அடைந்துள்ளது. திருப்பூர் ஐயப்பன் கோவிலில், நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் துவக்கினர்.அடர்பனியை பொருட்படுத்தாது, குளிர் நீரில் குளித்து, கறுப்பு வேட்டி, கருப்பு துண்டு மட்டும் அணிந்து, நெற்றியில் சந்தனம் பூசி, தங்களது குருசாமியை வணங்கி, மாலை அணிந்தனர். ஐயப்ப சுவாமியை வேண்டி, குருசாமிகள் முன் மண்டியிட்டு, பயபக்தியுடன் மாலை அணிந்து கொண்டனர். கொரோனா அச்சம் காரணமாக, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவது, நேற்று குறைவாக இருந்தது. சபரிமலையில், நோய் தடுப்பு நடவடிக்கை குறித்தும் தெரியவில்லை.இருப்பினும், நோய் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி, வழக்கம் போல் குழுவாக சென்று, சுவாமி தரிசனம் செய்து வர, ஐயப்ப பக்தர்கள் ஜனசங்கம் ஏற்பாடுகளை துவக்கியுள்ளது.
|