பதிவு செய்த நாள்
26
மே
2012
10:05
திருச்சி: திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து, திருப்புகழ் பாட அருளிய பெருமைக்குரிய ஸ்தலம். இங்குள்ள சக்தி தீர்த்தம் தீராத நோய் தீர்க்கவல்லது.இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக விழா சீரும் சிறப்புடன் நடந்தேறுவது வழக்கம். இந்தாண்டு வைகாசி விசாக விழா நேற்று காலை ஒன்பது மணிக்கு கடக லக்னத்தில் கொடியேற்றதுடன் துவங்கியது.தொடர்ந்து இரவு எட்டு மணிக்கு வெள்ளி விமானத்தில் முத்துக்குமார ஸ்வாமி திருவீதி உலா வந்தார். இன்று (26ம் தேதி) இரவு 8.30 மணிக்கு, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய ஸ்வாமி நந்தி வாகனத்தில் திருவீதியுலா வருகிறார்.தொடர்ந்து, ஜூன் ஒன்றாம் தேதி வரை மயில், ரிஷபம், சேஷ, குதிரை வாகனங்களில் சிங்காரவேலர் திருவீதி உலா வருகிறார். ஒன்றாம் தேதியன்று, சிங்காரவேலர் குதிரை வாகனத்தில், அதவத்தூர் தைப்பூச மண்டபத்திற்கு சென்று கோவில் திரும்புகிறார்.இரண்டாம் தேதி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு ரதாரோகணம் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு, திருத்தேருக்கு வடம் பிடித்தல் உற்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது.விசாக நட்சத்திரமான மூன்றாம் தேதியன்று, பால்காவடிகள், அலகுகள் குத்திக்கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக வந்து முருகனுக்கு நேர்த்திக்கடன்கள் செலுத்துகின்றனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடக்கிறது.அதைத்தொடர்ந்து, நான்காம் தேதி மாலை 4.30 மணிக்கு சங்காபிஷேகமும், இரவு ஏழு மணிக்கு தெப்ப உற்சவமும் நடக்கிறது. ஐந்தாம் தேதி இரவு எட்டு மணிக்கு, ஆளும் பல்லக்கு உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.