பதிவு செய்த நாள்
30
நவ
2020
03:11
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.கோவிலில், கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி, நேற்று காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
அதன்பின், பால், தயிர், நெய், சந்தனம், தேன் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.காலை, 6:00 மணிக்கு, தங்க கவசத்துடன் சுப்பிரமணியசுவாமி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விடுமுறை தினம் என்பதால், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர். கார்த்திகை தீபத்திருநாளின் முக்கிய நிகழ்வான, திருவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி மாலை, 5:00 மணிக்கு துவங்கியது. உற்சவமூர்த்தி சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை, தங்க கலசத்துடன் தங்க மயில் வாகனத்தில், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருவீதி உலா வந்தார்.மாலை, 6:00 மணிக்கு, தீப கம்பத்தில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக, மாலை, 4:00 மணி முதல் 6:30 மணி வரை, கோவில் அடிவாரத்தில் உள்ள கேட் அடைக்கப்பட்டது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோவில் திருப்பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்று, கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.