பதிவு செய்த நாள்
10
டிச
2020
10:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, நேற்றுடன் நிறைவு பெற்றது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கடந்த, 20ல், கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. இதில், கடந்த, 29ல், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று வரை, 11 நாட்கள் தொடர்ந்து எரிந்த மகா தீபம், 40 கி.மீ., தூரம் வரை தெரிந்தது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மகா தீப தரிசனம் செய்து வந்தனர். இந்த தீப திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, இன்று மலையிலிருந்து மகா தீப கொப்பரை கீழே இறக்கப்படும். பின் அதிலிருந்து சேகரிக்கப்படும், தீப மை பிரசாதம், வரும், 30ல், மார்கழி திருவாதிரையன்று, நடராஜருக்கு முதலில் சாத்தப்பட்டு, பின் பக்தர்களுக்கு, வினியோகம் செய்யப்படும். இதில், நெய் காணிக்கை செலுத்தியவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு, ஒரு பாக்கெட், 10 ரூபாய் எனவும், கோவில் நிர்வாகம் வழங்கப்படும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால், மகா தீபத்தன்றும், மறுநாள் பவுர்ணமியிலும் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த, 1 முதல், நேற்று வரை பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.