உலகளந்த பெருமாள் கோவில் முன் பள்ளம்: சீரமைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2020 04:12
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் சன்னதி வீதியில் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு முன்பாக பள்ளம் படுகுழியுடன், சேறும் சகதியுமாக இருப்பதால் பக்தர்களும், பொதுமக்களும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
திருக்கோவிலூர் நகரில் பேரூராட்சிக்கு உட்பட்ட சாலைகள் அனைத்தும் சிமெண்ட் சாலைகள். இவை பெரும்பாலும் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதிக போக்குவரத்து காரணமாகவும், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சாலைகள் அவ்வப்போது தோண்டப்படுவதால் ஏற்பட்ட பலத்தை முழுமையாக சீரமைக்காதது, புதிய கல்வெட்டு பாலம் அமைக்கும் போது சாலைக்கு நிகரான உயரத்தில் பாலத்தை கட்டாதது போன்ற காரணங்களால் நகர் முழுவதும் குண்டும் குழியுமாக சிமெண்ட் சாலைகள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திக் கோண்டிருக்கிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தினசரி 500க் கும் மேற்பட்ட வாகனங்களில் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களின் வாகனங்கள் சன்னதி வீதியில் இருக்கும் பல்லம்படு குழியில் தத்தி தள்ளாடி சொல்கிறது. கோவில் அருகாமையில் மழை நீரும், கழிவு நீரும் பள்ளத்தில் தேங்கி நிற்பதால் கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் கழிவுநீரை மிதித்துக் கொண்டே செல்ல வேண்டிய அவலம் ஏற்படுகிறது. மழை காலமான தற்பொழுது நகரில் இருக்கும் சிமெண்ட் பள்ளங்களை சிமெண்ட் கலவை கொண்டு சமன்படுத்தி சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது நடந்து செல்பவர்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.