பதிவு செய்த நாள்
29
மே
2012
11:05
திருத்தணி:மூன்று அம்மன் கோவில்களில் நடந்த தீ மிதி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.திருத்தணி நகராட்சி, 20 வது வார்டு மேல்திருத்தணியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா, கடந்த, 10ம் தேதி கொடியேற்றத்துடன் அக்னி வசந்த மஹோற்சவ விழா துவங்கியது. தினசரி காலை 10 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சந்தானக் காப்பு, சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மதியம் மகா பாரத சொற்பொழிவும், இரவு 7 மணிக்கு, அம்மன் திருவீதியுலாவும், இரவு 10 மணிக்கு மகா பாரத நாடகமும் நடந்தன.நேற்று முன்தினம், தீ மிதி திருவிழா முன்னிட்டு, காலை 8.30 மணிக்கு துரியோதனன் படுகளம் நடந்தது. காலை 10 மணிக்கு கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து மூலவர் அம்மனுக்கு படைத்து வழிப் பட்டனர். மாலை 6 மணிக்கு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, தீ மிதித்தனர். தொடர்ந்து வாணவேடிக்கையும், இரவு பக்தி கச்சேரியும் நடந்தன. இதில்,முன்னாள் எம்.எல்.ஏ., அரி, நகராட்சி தலைவர் சவுந்தர்ராஜன், கவுன்சிலர்கள் உட்பட, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அதே போல், திருத்தணி அடுத்த, குடிகுண்டா, ஆர்.கே. பேட்டை அடுத்த, விளாக்கானம்பூடி புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள திரவுபதி அம்மன் கோவில்களில் தீ மிதி திருவிழா நடந்தது. இதில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, தீ மிதித்தனர். திருத்தணி ஏ.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, அந்தந்த பகுதி பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.