பதிவு செய்த நாள்
29
மே
2012
11:05
மோகனூர்: எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவிலில், தேர் வெள்ளோட்டம், மே 31ம் தேதி நடக்கிறது. மோகனூர் யூனியன், எஸ்.வாழவந்தியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்ட மரத்தாலான பழமையான தேர் ஒன்றும் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில், நாமக்கல் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில்களில் தேர்கள் உருவாக்கப்பட்டது. அதில், எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பழமை வாய்ந்த இந்த மரத்தேரில் இருந்த ஸ்வாமியின் உருவங்களை, மர்ம நபர்கள் உடைத்தெரிந்தனர். மேலும், தேர் பழுதடைந்து காணப்பட்டது. அதை தொடர்ந்து, புதிய தேர் அமைக்க, கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, ஐந்து அடி சுற்றளவு கொண்ட நான்கு இரும்பு சக்கரமும், 12 அடி நீளம் கொண்ட இரண்டு இரும்பு அச்சும் செய்து, 27 அடி உயரம் கொண்ட புதிய தேர் அமைக்கும் பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கியது. தேர் அமைக்கும் பணி முடிவு பெற்றதை தொடர்ந்து, தேர் வெள்ளோட்டம் மே 31ம் தேதி நடக்கிறது. அன்று காலை 7.30 மணிக்கு, முக்கிய வீதிகள் வழியாக தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை தர்மகர்த்தாக்கள், நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.