Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ரிஷபம் : சௌபாக்கியம் தரும் சனி ரிஷபம் : சௌபாக்கியம் தரும் சனி
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (27.12.2020 முதல் 20.12.2023 வரை)
மேஷம்: உழைப்பே உயர்வு தரும்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2020
16:32

அஸ்வனி : பொது : இதுநாள் வரை பாக்ய ஸ்தானம் ஆகிய ஒன்பதாம் வீட்டில் சனியைக் கொண்டிருந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி முன்னேற்றத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது. பொறுப்புகள் கூடும். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உழைப்பினால் உயர்வு காண முடியும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்வீர்கள். கேதுவை நட்சத்திர அதிபதி ஆகவும், செவ்வாயை ராசி அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தில் சனியின் ஆட்சி பலம் தொழில்முறையில் சிறப்பான முன்னேற்றத்தைத் தரும்.
நிதி : வாழ்க்கைத்துணையின் பெயரில் அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வது எதிர்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். அவரது சுற்றத்தாருக்கு இக்கட்டான சூழலில் உதவி செய்ய வேண்டியிருக்கும். நெருங்கிய நண்பர் ஒருவரின் வாழ்க்கைத்தரத்தினை முன்னேற்ற வேண்டி நிதியுதவி செய்வீர்கள். செய்யும் தொழிலில் சிறப்பான தனலாபத்தினைக் காண உள்ளீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியத்தை சனி பகவான் நிச்சயம் பெற்றுத் தருவார். செல்வச் சேர்க்கையில் சிறிதும் குறைவு உண்டாகாது.

குடும்பம் : குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருவோர் குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் எடுத்த பணியை செவ்வனே செய்து முடிப்பார்கள். நெருங்கிய உறவினர்களால் தர்மசங்கடமான சூழ்நிலையை சந்திக்க நேரலாம். உறவினர் ஒருவருக்கு அவர் எதிர்பார்க்கும் உதவியைச் செய்ய இயலாது போகலாம். இதனால் சுற்றத்தார் மத்தியில் அவப்பெயர் உண்டாகும் வாய்ப்பு உண்டு. அடுத்தவர்களின் ஏச்சிற்கும், பேச்சிற்கும் மதிப்பளிக்காது உங்கள் வழியில் தொடர்ந்து பணியாற்றி வாருங்கள். உங்களின் செயல்களுக்கான காரணத்தை பிற்காலத்தில் புரிந்து கொள்வார்கள்.

கல்வி : ஆசிரிர்களின் பேச்சினில் வெளிப்படும் உதாரணக் கருத்துக்களை மட்டும் இறுகப் பற்றிக்கொண்டு பொது அறிவினை வளர்த்துக் கொள்வீர்கள். ஆயினும் மாணவர்கள் தங்கள் கல்வியில் தேக்க நிலையைக் காண நேரிடும். பிராக்டிகல் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறும் நீங்கள் தியரி சார்ந்த தேர்வுகளில் சற்று சுணக்கம் காண்பீர்கள். அவ்வாறில்லாமல் இரண்டிலும் சிறப்பான மதிப்பெண்களைப் பெற கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அரும்பாடுபட்டு உழைத்தால் மட்டுமே தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற முடியும் என்பதை உணர்ந்துகொள்வது நல்லது.
பெண்கள் : அதிகம் பேசாமல் அளந்து பேசி நற்பெயர் காண்பீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படும் தன்மை உங்களிடம் அதிகமாகக் காணப்படும். பிடித்த உணவு வகைகளை சூடாக உண்ண இயலாத வகையில் பணிச்சுமை கூடும். ஆயினும் பசி நேரத்தில் பட்டினி இருக்காமல் திரவ உணவினையாவது உட்கொள்வது நல்லது. கணவரின் செயல்களில் முன்னேற்றம் தரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உணர்வீர்கள். அவரது வெற்றிக்காக நீங்கள் பக்கபலமாக நிற்க வேண்டியிருக்கும். உங்களது ஆலோசனைகள் அவரை திறம்பட வழிநடத்திச் செல்லும்.

ஆரோக்யம் : பிள்ளைகளின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. சனிக்குரிய நோய்களினால் நீங்கள் அவதிப்படக்கூடும். பற்கள் சொத்தை, எலும்பு மஜ்ஜைகளில் பிரச்சினை, அல்சர், உடல் இளைத்தல், இருமல் போன்ற தொந்தரவுகளை சந்திக்க நேரிடும்போது தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

தொழில் : ஜீவன ஸ்தானத்தில் சனி ஆட்சி பலம் பெறுவதால் வாழ்வியல் தரம் உழைப்பின் காரணமாக சிறப்பான உயர்வினைக் காணும். இதுநாள் வரை சரியான வாய்ப்பிற்காக காத்திருந்த நீங்கள் தற்காலத்தில் தொழில்முறையில் அதிக கவனம் செலுத்தி சிறப்பான நற்பலன்களைக் காண உள்ளீர்கள். உத்யோகஸ்தர்கள் தங்களிடமிருக்கும் தனித்திறமையை வெளிப்படுத்தி பதவி உயர்விற்கான வாய்ப்பினைத் தேட நேரிடும். தொழிலதிபர்களும், வியாபாரிகளும் மிகப் பெரிய லாபத்தினைக் காண இயலாவிட்டாலும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் வியாபார யுக்தியை மாற்றிக்கொண்டு செயல்பட்டு வெற்றி காண்பார்கள். 10ம் இடத்துச் சனி தொழிலைக் கெடுப்பார் என்ற கருத்தினை மாற்றி அமைக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்பதனை நினைவில் கொண்டு செயல்படுவது நல்லது. மற்றபடி வரவிருக்கும் மூன்று ஆண்டு காலமும் சனியின் அருளால் ஓயாத உழைப்பினை வெளிப்படுத்தி தனலாபம் காண வேண்டியிருக்கும் என்பதே தொழில் முறையில் உங்களுக்குரிய பலனாக அமைகிறது.

பரிகாரம் : கருமாரியம்மனை வணங்கி வாருங்கள்.

பரணி: பொது : ஜீவன ஸ்தானம் வலுப்பெறுவதால் வாழ்வியல் தரம் உயர்வடையக் காண்பீர்கள். செவ்வாயை ராசிநாதனாகவும், சுக்ரனை நட்சத்திர அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு இதுநாள் வரை கண்டு வந்த அனுபவத்தின் காரணமாக செய்யும் செயல்களில் நிதானமும், ஒருவித பக்குவத்தன்மையும் வெளிப்படும். சுய உழைப்பினால் உயர்வினைக் காண உள்ள நீங்கள் தொழில்முறையில் புதிய யுக்திகளைக் கையாண்டு சிறப்பான வெற்றியினைக் காண உள்ளீர்கள். வலிமையான ஜாதக அமைப்பினைக் கொண்டவர்கள் இந்த நேரத்தில் பிரபல்ய யோகம் அடைவார்கள் என்பது உறுதி. படபடப்பின்றி நிதானமாகச் செயல்பட்டு வருவதால் காரியவெற்றி என்பது சாத்தியமாகி வரும். நான்கு பேர் மத்தியில் விவேகமான செயல்பாடுகள் உங்கள் பெருமையை உயர்த்தும்.
நிதி : உழைப்பிற்கேற்ற ஊதியம் என்பது இந்த நேரத்தில் நிச்சயம் கிடைக்கும். இதுநாள் வரை உண்மையாக உழைத்து வந்ததன் பலனை இந்த நேரத்தில் அனுபவிக்க உள்ளீர்கள். நெடுநாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொருள் வரவு விரைவில் வந்து சேரும். சொத்து சேர்க்கையில் ஈடுபடுவதற்கு சரியான சந்தர்ப்பம் அமையும். அடுத்த மூன்று ஆண்டுகளில் பொருளாதார நிலை நிச்சயம் ஏறுமுகமாகவே இருந்து வரும்.

குடும்பம் : குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருவோர் குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் எடுத்த பணியை செவ்வனே செய்து முடிப்பார்கள். உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பார்கள். தகப்பனார் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. அவர்கள் உங்கள் செயலில் உள்ள நியாயத்தினை உணர்ந்து கொள்ளும் காலம் வரும் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வாருங்கள்.

கல்வி :  வித்யா ஸ்தானத்தில் சனியின் பார்வை விழுவதால் மாணவர்கள் தங்கள் கல்வியில் சற்று தேக்க நிலையைக் காண நேரிடலாம். ஆயினும் தேர்வு நேரத்தில் நிலவும் குரு பகவானின் சஞ்சாரம் சனியின் தாக்கத்தினைக் குறைத்து உங்களுக்குத் துணை புரியும். செய்முறைத் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறும் நீங்கள் எழுத்துத் தேர்வுகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒருமுறை எழுதிப் பார்த்தாலே உங்கள் மனதில் பதிந்து விடும் என்பதால் பாடங்களை அவ்வப்போது எழுதிப் பாருங்கள். சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர் போன்ற துறைகளில் பயிலும் மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள் : குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக் காண்பீர்கள். வாழ்க்கைத்துணையின் பணிகளில் உங்களது ஆலோசனைகள் உதவிகரமாய் அமையும். பிள்ளைகளின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். புதிய தோழியரின் இணைவினால் வெளி உலக அனுபவங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வேலைபளுவின் காரணமாக நேரத்திற்கு உண்ணாமல் இருப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும். விரத நாட்களில் திரவ உணவினையாவது உட்கொள்வது உடல்நலத்தினைக் காக்கும்.

ஆரோக்யம் : பொதுவாக ஆரோக்யம் நன்றாக இருந்து வரும். கடுமையான பணிச்சுமையின் காரணமாக ஒரு சிலர் முதுகுவலி, தோள்வலி போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். தோல் சம்பந்தமான நோயினால் அவதிப்பட்டு வருபவர்கள் கூடுதல் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். மற்றபடி தேக ஆரோக்யம் சீராக இருந்து வரும்.
தொழில் : ஜீவன ஸ்தானம் வலிமையாக இருப்பதால் தொழில் சிறக்கக் காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் தங்களிடமிருக்கும் தனித்திறமையை வெளிப்படுத்தி பதவி உயர்விற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். அலுவலகத்தில் நற்பெயருக்காக கூடுதலாக உழைக்க நேரிடும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடமாற்றங்கள் போன்ற சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். தொழிலதிபர்களும், வியாபாரிகளும் மிகப் பெரிய லாபத்தினைக் காண இயலாவிட்டாலும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் வியாபார யுக்தியை மாற்றிக்கொண்டு செயல்பட்டு வெற்றி காண்பார்கள். உணவுப் பொருட்கள் வியாபாரம், குளிர்பான விற்பனை, தோல்பொருட்கள் ஏற்றுமதி, செல்போன், சிம்கார்டு விற்பனை ஆகிய தொழில்களை செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.

பரிகாரம் : செவ்வாய் தோறும் கந்தசஷ்டி கவசம் படித்து வாருங்கள்.

கார்த்திகை 1ம் பாதம் : பொது : இந்த சனிப்பெயர்ச்சி உங்களின் உழைப்புத் திறனை வெளிப்படுத்துகின்ற வகையில் அமையும். உங்களது செயல்கள் வேகமாகவும், வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகின்ற வகையிலும் இருக்கும். உங்களது இயற்கை குணமான படபடப்பையும், அவசரத்தனத்தையும், முன்கோபத்தையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். எடுத்த வேலையை முடிக்கும் வரை உங்களது கவனம் சிதறாத வகையில் மனதினை ஒருமுகப்படுத்தி செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

நிதி : அநாவசியமான செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பீர்கள். கையிருப்பில் பணமாக வைத்துக்கொள்ளாது அரசுத் தரப்பு நிறுவனங்களில் சேமிப்பாக வைத்துக் கொள்வது நல்லது. அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. கவனத்துடன் இருக்கவும். நிலுவையில் உள்ள கடன்பிரச்சினைகள் குறையும். அதே போல அரசுத் தரப்பிலிருந்து எதிர்பார்த்திருந்த வங்கிக்கடன்கள் போன்றவை வந்து சேரும். பொதுவாக பொருளாதார நிலை சிறப்பாக இருந்து வரும்.

குடும்பம் : குடும்பத்தினரோடு செலவழிக்கும் நேரம் மிகக் குறைவாக இருக்கும். இதனால் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புரிந்துகொள்ளும் தன்மையில் பிரச்சினைகள் தோன்றலாம். ஒளிவு மறைவின்றி எல்லோரையும் கலந்தாலோசித்து குடும்ப விவகாரங்களில் முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளில் உங்களின் பங்கு முக்கியத்துவம் பெறும். உறவினர்கள் வழியில் தர்மசங்கடமான சூழலைக் காண நேரிடும்.

கல்வி : ஆராய்ச்சித்துறையில் இருக்கும் உயர்கல்வி மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயலாஜி, மற்றும் மருத்துவத்துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். தியரியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இரவினில் நீண்ட நேரம் கண் விழித்து படிப்பதை விட அதிகாலை நேரத்தில் படிப்பது நன்மை தரும்.


பெண்கள் : குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் தீர குலதெய்வ வழிபாட்டினை வற்புறுத்தி செய்து முடிப்பீர்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் இருந்து வந்த வீண் வம்பு பிரச்சினைகள் விலகும். பிறந்த வீட்டு தரப்பினரால் ஒரு சில சங்கடத்தை சந்திக்க நேரலாம். இக்கட்டான சூழலில் அமைதியாக இருப்பது ஒன்றே தீர்வினைத் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முக்கியமாக கணவரின் முன்னேற்றத்தில் உங்களது பங்கு பிரதானமாக இருக்கும்.

ஆரோக்யம் : உஷ்ண உபாதையால் உடல்நிலையில் ஒரு சில தொந்தரவினைக் காண நேரிடும். வாகனங்கள் மற்றும் தீ விபத்துகளினால் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவுவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். சமையல் செய்யும்போதும் மின்சார உபகரணங்களை கையாளும்போதும் அதிக எச்சரிக்கை தேவை. முடிந்த வரை வாகனங்களை இயக்குவதை தவிர்ப்பது நல்லது.


தொழில் : உழைப்பதற்கு அஞ்சாத உங்களுக்கு இந்த நேரம் வரப்பிரசாதமாக இருக்கும். உங்களது உண்மையான உழைப்பு வெளியுலகிற்குத் தெரிய வரும். வண்டி, வாகனங்கள், மின்சார இயந்திரங்கள் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்கள் ஏறுமுகத்தினைக் காண்பார்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களால் லேசான பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். ஆயினும் அவர்களை விட்டுக்கொடுக்காது நடந்துகொள்வதால் அவர்களது ஆதரவினையும் பெற்று நற்பெயரினை அடைவீர்கள். சுயதொழில் செய்பவர்கள் அடுத்த நிலைக்கு முன்னேறுவார்கள். பொதுவாக அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க முடியாது. உழைப்பு ஒன்றே உங்களுக்கு உயர்வினைத் தரும் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.

பரிகாரம் : கிருத்திகை விரதம் இருந்து வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது சுவாமிமலை சென்று சுவாமிநாத ஸ்வாமியை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (27.12.2020 முதல் 20.12.2023 வரை) »
temple
கார்த்திகை 2, 3, 4ம் பாதங்கள் : பொது : ‘அஷ்டமத்துச் சனி’எனும் கஷ்டமான சூழ்நிலையிலிருந்து விடுபட்டு ... மேலும்
 
temple
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள் : பொது : ‘கண்டச் சனி’ எனும் நிலையிலிருந்து வெளியேறி ‘அஷ்டமத்துச் சனி’ எனும் ... மேலும்
 
temple
புனர்பூசம் 4ம் பாதம் : பொது : கடக ராசிக்கு ஏழாம் இடமாகிய மகர ராசிக்குள் இடம் பெயர்ந்து உங்களை கண்டச்சனி ... மேலும்
 
temple
மகம் : பொது : இதுவரை ஐந்தாம் இடத்தில் வசித்து வந்த சனி பகவான் தற்போது ஆறாம் வீட்டிற்கு இடம் பெயர உள்ளதால் ... மேலும்
 
temple
உத்திரம் 2, 3 4ம் பாதங்கள் : பொது : அர்த்தாஷ்டம சனியின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.