பதிவு செய்த நாள்
14
டிச
2020
12:12
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஈஸ்வரர் கோயில் கட்டடத்தின் கீழே கிடைத்த தங்க ஆபரணங்களை பொது மக்கள், வருவாய்த் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, வேடபாளையம் பகுதியில், 500 ஆண்டுகள் பழமையான குழம்பேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், முறையான
பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது. அதனால், இக்கோவிலை புதுப்பித்து, குடமுழுக்கு நடத்த அப்பகுதி மக்கள் திட்டமிட்டனர்.இதற்காக, திருப்பணி குழு நியமனம் செய்து, முதற்கட்ட பணியை துவக்கினர்.
நேற்று முன்தினம், கோவில் கருவறையின் நுழைவு வாயிலின் முன் உள்ள கருங்கற்களான படிக்கட்டுகளை அகற்றினர். அப்போது, சுவாமிகளுக்கு சூட்டப்படும் வகையிலான தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க நாணயங்கள் படிக்கட்டு கீழே குவியலாக இருந்ததை கண்டறிந்தனர்.காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வித்யா, உத்திரமேரூர் வட்டாட்சியர் ஏகாம்பரம் உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று காலை, அப்பகுதிக்கு சென்று நகைகளை ஒப்படைக்கும்படி கேட்டனர்.
அதற்கு அப்பகுதி மக்கள் மறுப்பு தெரிவித்து பின், நகைகளை ஒப்படைக்கும் பட்சத்தில், கோவில் கட்டுவதற்கு அரசு உதவிட வேண்டும் என, வலியுறுத்தினர்.இதனால், நகைகளை பெறுவதில் மாலை வரை பிரச்னை நீடித்தது. பின், பொதுமக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் நகைகளை ஒப்படைத்தனர். இதுகுறித்து, உத்திரமேரூர் வட்டாட்சியர் ஏகாம்பரம் கூறியதாவது:ஒட்டியாணம், ஆரம், மகாலட்சுமி உருவம், குண்டுமணிகள் உள்ளிட்ட எட்டு வகையிலானதங்க ஆபரணங்கள், குழம்பேஸ்வரர் கோவில் கட்டட அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. இவை, அப்பகுதி மக்களிடத்தில் இருந்து பெறப்பட்டு, உத்திரமேரூர் அரசு கருவூலத்தில், தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நகைகளின் மொத்த எடை இன்னும் அளவிடப்படவில்லை,இவ்வாறு, அவர் கூறினார்.