பதிவு செய்த நாள்
14
டிச
2020
05:12
சித்திரை 3, 4ம் பாதம் : இதுநாள் வரை மூன்றாம் இடமாகிய தைரிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் தற்போது சுக ஸ்தானம் ஆகிய நான்காம் இடத்தில் அமர்ந்து ‘அர்த்தாஷ்டம சனி’ என்னும் நிலைக்கு உங்களை ஆளாக்க உள்ளார். நான்காம் இடத்துச் சனி நன்மை தருபவர் அல்ல. பொதுவாக சனி நான்காம் இடத்தில் அமரும்போது நமது நம்பிக்கைக்குரியவர்களையும், நலம் விரும்பிகளையும், குடும்பத்தினரையும், நாம் மிகவும் விரும்பும் நபர்களையும் பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகக் கூடும். இடம் விட்டு இடம் பெயர வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும். நல்லது என நினைத்து நாம் செய்யும் செயல் அடுத்தவர்களால் தீய கண்ணோட்டத்துடன் பாதிக்கப்படலாம். வீணான பொருள் இழப்பு, மற்றவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை, மன உளைச்சல் போன்ற சிரமங்களை சந்திக்க நேரிடும்.
நிதி : சம்பாதிக்கும் சொத்துக்களைப் பொறுத்த வரையில் ஸ்திரத்தன்மை உண்டாகும். வீடு, வண்டி, வாகனம், மனை போன்றவை உங்களின் உழைப்பின் பலனாக உருவெடுக்கும். புதிய சொத்துக்கள் சேரும். உங்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்கொணரும் வகையில் சனி பகவான் துணை நிற்பார். எதிர்காலத்திலும் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும்படியான காரியங்களில் உங்களை சனி பகவான் ஈடுபடச் செய்வார். அதே போன்று பொருளாதார ரீதியாக பெருத்த இழப்பு ஏதும் நிகழாமல் சனிபகவான் உங்களுக்குத் துணை நிற்பார். அதே நேரத்தில் சேமிப்பில் நாட்டம் கொண்டு கடன்படும் சூழலில் மாட்டிக் கொள்வீர்கள். சரியான வகையில் திட்டமிட்டு சேமிப்பில் ஈடுபடுவது நல்லது.
குடும்பம் : குடும்ப சூழ்நிலையைப் பொறுத்த வரை அன்றாட வாழ்க்கையில் உண்டாகும் சிறு சிறு பிரச்னைகளில் அதிகம் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நன்மை தரும். உங்கள் தலையீட்டால் சிறு பிரச்னைகளும் பெரிதாகி சிரமத்தினைத் தோற்றுவிக்கலாம். நான்காம் இடத்தில் சனி அமர்வதால் தாயாரின் உடல்நிலையில் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தாயார் வழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். அவர்களுக்கு உதவி செய்ய இயலாத சூழ்நிலையில் நீங்கள் இருப்பதை உணராத அவர்கள் உங்களோடு விரோதம் கொள்ளும் வாய்ப்பு உருவாகலாம்.
கல்வி : மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அவ்வப்போது சோம்பல்தன்மை உடலில் தலையெடுக்கும். சிறிதளவு படிக்கும்போதே உடலில் அசதியை உணர்வீர்கள். உங்களின் சூழ்நிலையை உணர்ந்து கொண்டு நண்பர்களுடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. டெக்னிக்கல் சார்ந்த படிப்புகள், கலைத்துறை கல்வி, ஓவியம், நாட்டியம், இசைப்பயிற்சி, சங்கீதம் சார்ந்த மாணவர்கள் கடின உழைப்பினால் முன்னேற்றம் காண்பார்கள். சித்திரை நட்சத்திரக்காரர்களைப் பொறுத்தவரை எதையும் தாங்கும் இதயம் உடையவர்கள் என்பதால் பயம் ஏதுமின்றி சிறப்பான முறையில் தேர்வுகளை எதிர்கொள்வர்.
பெண்கள் : கணவர் உங்கள் பணிகளுக்குத் துணை நிற்பார். அவரது துணை அல்லும் பகலும் உங்களுக்குத் தேவைப்படும். அவரோடு கருத்து வேறுபாடு தோன்றும் சமயத்திலும் அவர் உங்களை அழகாகப் புரிந்துகொண்டு உங்களுக்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்வார். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற கூடுதலாக செலவழிக்க நேரிடும். அவர்களின் கல்விநிலை உங்களை கவலைகொள்ளச் செய்யும். அவர்களுடைய எதிர்காலம் சிறக்க ஒரு சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.
உடல்நிலை: நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கையுடன் பழகுவது அவசியம். சுக ஸ்தானத்தில் சனி அமர்வதால் ஓய்வற்ற தன்மையின் காரணமாக உடலில் சுகவீனம் தோன்றக்கூடும். வாந்தி, தலைசுற்றல், பித்த மயக்கம், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்னைகளால் அவதிப்பட நேரிடும்.
தொழில் : தொடர்பணிச்சுமையின் காரணமாக ஓய்வெடுக்கும் நேரம் குறையலாம். நண்பர்களுடன் இணைந்து செய்யும் கூட்டுத்தொழிலில் சிறப்பான தனலாபத்தினைக் காண்பீர்கள். கமிஷன், தரகு, ஸ்டேஷனரி, உணவுப் பண்டங்கள் வியாபாரம், தானியங்கள் வியாபாரம், திரவப் பொருட்கள், வாசனாதி திரவியங்கள், பால் சார்ந்த வியாபாரம், போன்றவற்றில் சிறப்பான தனலாபத்தினைக் காண்பீர்கள். வியாபாரம் சார்ந்த முக்கியமான பிரச்னைகளாகட்டும், தொழிலாளர் சார்ந்த விவகாரங்கள் ஆகட்டும், ஏதாகிலும் பர்ட்னர்கள் ஒன்றாக இணைந்து செல்வதால் பிரச்னைகள் எளிதில் முடிவிற்கு வரக் காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். ஜீவன ஸ்தானத்தின் மீது விழும் சனியின் பார்வை உத்யோகத்தில் ஸ்திரத்தன்மையை உண்டாக்கும்.
பரிகாரம் : பூவராஹமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். சனிதோறும் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்வது நல்லது.
சுவாதி : திறமை வெளிப்படும்
அர்த்தாஷ்டம சனியின் காலத்திற்குள் நுழைய உள்ள உங்களுக்கு சற்று சோதனைகள் உருவாகும். மற்றவர்களிடமிருந்து நாம் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக உணர்வீர்கள். நெருங்கிய உறவினர்கள் வழியில் ஒரு சில பிரச்னைகள் உருவாகக்கூடும். நல்லது என்று நினைத்து அறிவுரை சொல்லப்போக அது அடுத்தவர்கள் கண்களுக்குத் தவறாகத் தோன்றலாம். முடிந்தவரை அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. நெருங்கிய நபர் ஒருவருக்கு இக்கட்டான சூழலில் உதவி செய்ய இயலாமல் தர்ம சங்கடமான சூழலை சந்திக்க நேரிடலாம். 2021ன் ஏப்ரல், மே மாதத்தில் தொழில்முறையில் இடமாற்றத்தினை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உங்களின் தனிப்பட்ட திறமைகள் வெளிப்படும் நேரம் இது. எதிர்காலத்திலும் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும்படியான பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் அடைவீர்கள்.
நிதி : பொருளாதார நிலையில் இழப்பு ஏதும் நேராத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியிருக்கும். சம்பாதிக்கும் பணத்தினை அசையாச் சொத்துக்களாக மாற்றிக் கொள்வது நல்லது. வீடு, வண்டி, வாகனம், மனை போன்றவை வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். சொத்துக்களை வாங்கும் பொருட்டு சிறிது கடன்பட நேர்ந்தாலும் தவறில்லை. இந்த நேரத்தில் சேரும் அசையாச் சொத்துக்கள் எதிர்காலத்திற்கு மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் அதிக எச்சரிக்கை தேவை.
குடும்பம் : உடன்பிறந்தோருக்கு உதவுவதில் மிகுந்த அக்கறை காட்டுவீர்கள். அவர்களிடமிருந்து பரஸ்பர உதவி இல்லாவிடினும் மிகுந்த ஈடுபாட்டுடன் உங்களால் இயன்றதை அவர்களுக்குச் செய்வீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற கூடுதலாக செலவழிக்க நேரிடும். வாழ்க்கைத்துணையின் மனநிலையைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.
கல்வி : அசாத்தியமான ஞாபக சக்தியினை கொண்டிருக்கும் உங்களுக்கு வித்யா ஸ்தானத்தில் அமரும் சனியினால் கல்வியில் ஒரு சில இடைஞ்சல்களை சந்திக்க நேரலாம். குரு பகவானின் இணைவு துணையாக இருப்பதால் 2021 நவம்பர் மாதம் வரை கவலை கொள்ளத் தேவையில்லை. தேர்வு எழுதும் சமயம் கேள்வியினை சரியாகப் புரிந்துகொண்டு விடையளிக்க வேண்டியதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்களின் குருவாகிய ஆசிரியர் தரும் சிறுசிறு குறிப்புகள் கூட தேர்வு நேரத்தில் மிகவும் பயனுள்ளதாய் அமையும். நண்பர்களுடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.
பெண்கள் : குடும்ப சூழ்நிலையைப் பொறுத்த உங்களின் தலையீட்டால் சிறு பிரச்னைகளும் பெரிதாகி சிரமத்தினைத் தோற்றுவிக்கலாம். வாழ்க்கைத்துணை குடும்ப விவகாரங்களில் இருந்து வரும் பிரச்னைகளைத் தீர்க்கத் துணை நிற்பார். அவரது துணை அல்லும் பகலும் உங்களுக்குத் தேவைப்படும். சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கணவன்&மனைவி இருவருமாக இணைந்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். முன்பின் தெரியாத மாற்று மதத்தினைச் சேர்ந்த பெண்களிடம் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
உடல்நிலை: சுக ஸ்தானத்தில் சனி அமர்வதால் உண்டாகும் ஓய்வற்ற நிலையின் காரணமாக உடல்நிலையில் சற்று சிரமம் காண்பீர்கள். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளால் அவதிப்பட நேரிடும். ஒரு சிலருக்கு சிறுநீரகக் கோளாறுகள், பித்தப்பையில் கற்கள் போன்ற பிரச்னைகள் தோன்றும் வாய்ப்பு உண்டு. அளவுக்கதிகமாக எந்த ஒரு விஷயத்தையும் பற்றி குழப்பிக் கொள்ளாமல் அமைதி காப்பது உடல்நலத்திற்கு நல்லது.
தொழில் : உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். பணிகளில் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் கூடுதல் அதிகாரத்தினைப் பெறுவீர்கள். கூட்டுத்தொழிலில் சிறப்பான தனலாபத்தினைக் காண்பீர்கள். கமிஷன், ஸ்டேஷனரி, பால் சார்ந்த உணவுப் பண்டங்கள் வியாபாரம், வாசனாதி திரவியங்கள் போன்றவற்றில் சிறப்பான தனலாபம் கிடைக்கும். அந்நிய தேசம் சார்ந்த முதலீடுகள், அந்நிய தேசப் பணி ஆகியவற்றில் அதிக எச்சரிக்கை அவசியம். உயர்பதவிகளில் உள்ளவர்கள் தொழிலாளர் சார்ந்த பிரச்னைகளை அவ்வப்போது எதிர்கொள்ள நேரிடும். தொழில்முறையில் உள்ள மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள்,
பரிகாரம் : அரசமரத்தடி நாகரை பிரதக்ஷிணம் செய்து வழிபட்டு வருவது நல்லது. அர்த்தாஷ்டம சனியின் காலத்தில் உங்களால் இயன்ற அளவிற்கு மரக்கன்றுகளை நடுவது மிகவும் நல்லது.
விசாகம் 1, 2, 3ம் பாதம் : நீங்கள் செய்ய நினைக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும் முழுமையாக திட்டமிட்டு இறங்க வேண்டி இருக்கும். கடைசி நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தீர்களேயானால் நிச்சயமாக ஏதேனும் ஒரு காரணத்தால் எடுத்துக்கொண்ட வேலையை நேரத்திற்கு செய்ய இயலாமல் போகும். சற்று சிரமப்பட்டாலும் கூட எடுத்துக்கொண்ட வேலையை மிகச்சரியாக செய்து முடிப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். நட்சத்திர அதிபதி குரு நவம்பர் மாதம் வரை சனியுடன் இணைந்து சஞ்சரிப்பதால் அதுவரை பெரிய சிரமம் இருக்காது. அதிக லாபமில்லாவிட்டாலும் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். 2021 ஜூலை மாதம் முதல் உங்கள் உழைப்பிற்கான பலனைக் கண்கூடாகக் காண்பீர்கள். பெயர், புகழ், அந்தஸ்தோடு எதிர்பார்த்த தனலாபமும் வந்து சேரும். தொலைதொடர்பு சாதனங்களின் உதவியோடு அலைந்து திரிந்து செய்ய வேண்டிய காரியங்களை உட்கார்ந்த இடத்திலேயே செய்து முடிப்பீர்கள்.
நிதி : பொருளாதார ரீதியாக முன்னேற்றம் இருந்தாலும் இடைத்தரகர்களால் அதிக சிரமத்திற்குள்ளாக நேரிடும். புதிய சொத்து வாங்கும்போதும் சரி, முதலீடுகளில் இறங்கும்போதும் சரி இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாற்று மொழி பேசும் நபர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புண்டு. வெளியூர் பயணத்தின்போது ஞாபக மறதியின் காரணமாக பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம்.
குடும்பம் : குடும்பத்தில் லேசான சலசலப்பு இருந்து வரும். பெற்றோருக்கு கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு செயல்படுவீர்கள். உறவினர்களுடன் அதிகமாகப் பேசுவதைத் தவிர்ப்பீர்கள். குடும்ப விவகாரங்களிலும், இதர பணிகளிலும் அமைதியுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உங்களது மனதில் தோன்றும் எண்ணங்களை தொலைதூரத்தில் இருக்கும் பிள்ளைகளிடம் எழுத்து வடிவில் வெளிப்படுத்துவது நல்லது. உடன்பிறந்தோருக்கு உதவ வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
கல்வி : மாணவர்கள் தங்களுக்கு உண்டாகும் ஞாபக மறதியினைப் போக்க தீவிர எழுத்துப்பயிற்சியில் இறங்க வேண்டியது அவசியம். உங்கள் எழுத்துவலிமை அதிகரிப்பதால் தேர்விற்கு முன்னதாக பல மாதிரித்தேர்வுகளை எழுதிப் பார்ப்பது நல்லது. கம்ப்யூட்டர் சயின்ஸ். அக்கவுண்டன்சி, காமர்ஸ், ஆடிட்டிங் போன்ற துறையைச் சார்ந்த மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.
பெண்கள் : குடும்பத்து பிரச்னைகளை வெளியே சென்று பேசுவதால் தொல்லைகள் உண்டாகும். முன்பின் தெரியாத மாற்றுமொழி பேசும் பெண்மணியின் நட்பு அநாவசிய பிரச்னைகளை உருவாக்கும். கணவரோடு அவ்வப்போது கருத்துவேறுபாடு தோன்றி மறையும். அவரோடு இணைந்து செய்யும் பணிகளில் உடனுக்குடன் வெற்றியை கண்டு வருவீர்கள். அவரது உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தினை மிகுந்த பொறுப்புடன் நடத்திச் செல்வீர்கள்.
உடல்நிலை: சரியான நேரத்திற்கு சரியான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமே உங்களது ஆரோக்கியத்தினைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடல்நிலையில் தோன்றும் சிறு பாதிப்புகள் கூட பிற்காலத்தில் பெரிய பிரச்னைகளை உருவாக்கலாம். உடல்நிலையில் தோன்றும் மாற்றத்தினை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இராமல் உடனுக்குடன் கவனித்துக்கொள்வது நல்லது. நரம்புத் தளர்ச்சி, தைராய்டு பிரச்னை ஆகியன உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு.
தொழில் : உடன்பணிபுரிவோர்களுடன் ஒத்துப்போவது அவசியமாகிறது. 2021 ஜூன் மாதம் வரை தொழில் ரீதியாக சிரமத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். உத்யோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றத்தினால் சிரமங்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. ஆயினும் உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். கூட்டுத்தொழிலில் உள்ளவர்களுக்கு கணக்கு வழக்குகளில் மனஸ்தாபம் உண்டாகும். வியாபாரிகள் வெளியில் இருந்து வர வேண்டிய கடன் பாக்கிகளை அதிகம் நிலுவையில் வைக்காமல் உடனுக்குடன் வசூலிப்பது நன்மை தரும். புதிய முயற்சிகள் சீரான வெற்றியைத் தரும். ஹோட்டல், காய்கறி, பழங்கள், ஜுஸ், மளிகை வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அந்நிய தேசத்தில் பணிபுரிவோர் தங்கள் பணியில் ஸ்திரத்தன்மையைக் காண்பார்கள். பொதுவாக இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் அதிர்ஷ்டத்தின் அளவு குறைவு. ஆயினும் உங்கள் தனித்திறமையின் காரணமாகவும் சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுவதன் மூலமாகவும் வெற்றி காண்பீர்கள்.
பரிகாரம் : ரேணுகா பரமேஸ்வரியை வணங்கி வாருங்கள். மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் அன்னதானம் செய்வதும் நல்லது.