பதிவு செய்த நாள்
16
டிச
2020
03:12
மாமல்லபுரம் - மாமல்லபுரத்தில், நேற்று திறக்கப்பட்ட, தொல்லியல் சின்னங்களை, சொற்ப பயணியரே கண்டுகளித்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், பல்லவர் கால கலைச்சிற்பங்களை, உள், வெளிநாட்டுப் பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.கொரோனா ஊரடங்கால், கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட சிற்ப வளாகங்கள், ஒன்பது மாதங்களாக மூடப்பட்டன. இதையடுத்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி, சிற்ப வளாகங்கள் நேற்று திறக்கப்பட்டன.சிற்பங்களை பராமரிக்கும் தொல்லியல் துறையினர், சுற்றுலா வந்த பயணியரிடம், நுழைவுக்கட்டணத்தை, பணமாக பெறாமல், மொபைல் போனில், இணையவழி பரிமாற்றம் மூலமே, கட்டணம் பெற்றனர். முக கவசம், உடல் வெப்ப பரிசோதனைக்கு பின், சிற்ப வளாகத்திற்குள், பயணியரை அனுமதித்தனர். பேரூராட்சி ஊழியர்கள், சிற்ப வளாகங்களை துாய்மைப்படுத்தி, கிருமி நாசினி தெளித்தனர். சுற்றுலா அனுமதி இல்லாத, நேற்று முன்தினம், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பயணியர் ஏராளமாக குவிந்தனர்.நேற்று, வார வேலை நாள் என்பதால், சொற்ப அளவிலான பயணியரே வந்து, சிற்பங்களை கண்டுகளித்தனர். வார இறுதி விடுமுறை நாட்களில், பயணியர் குவிவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.