காத்மாண்டு: அண்டை நாடான நேபாளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பசுபதி நாத் சிவன் கோவில் ஒன்பது மாதங்களுக்கு பின் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட்டது.
நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே பக்மதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது பசுபதி நாத் கோவில்.இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் கொரேனா காரணமாக மார்ச்சில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து இக்கோவில் மூடப்பட்டது.ஒன்பது மாதங்களுக்குப் பின் இக்கோவில் திறக்கப்பட்டது.
முக கவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். நுழைவாயிலில் வைத்திருந்த கிருமி நாசினியில் கையை சுத்தம் செய்த பின் தானியங்கி கேமரா மூலம் உடல் வெப்பத்தை அளக்கும் கருவிகள் பொருத்தப்பட்ட பிரத்யேக அறை வழியாக பக்தர்கள் சன்னதிக்குள் சென்றனர். ஒருவருக்கொருவர் 2 மீட்டர் இடைவெளியில் நிற்க வசதியாக தரையில் வட்டக் குறி வரையப்பட்டிருந்தது. அதன் வரிசைப்படி நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று சிவபெருமானை வணங்கி வழிபட்டனர். பல மாதங்கள் கோவில் மூடப்பட்டிருந்த காரணத்தால் நேற்று முன்தினம் சிறப்பு பவித்ர பூஜை நடைபெற்றது.வழக்கமான சிறப்பு பூஜைகள் பஜனைகள் ஆகியவை துவங்க இன்னும் சில நாட்கள் ஆகும் என பசுபதி நாத் கோவில் தலைமை அறங்காவலர் பிரதீப் தகால் தெரிவித்து உள்ளார்.