பதிவு செய்த நாள்
17
டிச
2020
12:12
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் மார்கழி மாத அதிகாலை மரகதலிங்க தரிசனம் துவங்கிய நிலையில், முறையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்யாததால், நெரிசலில் சிக்கி பக்தர்கள் திணறினர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி உள்ளிட்ட மாதாந்திர விசேஷ நாட்களிலும், வைகாசி விசாக தேர் திருவிழா, புரட்டாசி மாத கேதார கவுரி விரதம், பார்வதி தேவி மற்றும் பிருங்கி முனிவர் வழிபாடு செய்த மார்கழி மாத மரகதலிங்க வழிபாடு ஆகியவற்றில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்த ஆண்டுக்கான மரகதலிங்க வழிபாடு, நேற்று அதிகாலை துவங்கியது. ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்டு, கட்டுப்பாடுகளுடன், பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, அறநிலையத்துறை அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில், நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால், நெரிசலில் சிக்கி தவித்தனர். முக கவசம் அணிந்து வந்துள்ளனரா, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கின்றனரா என்ற கண்காணிப்பு இல்லை. பக்தர்கள் வரிசையாக தரிசனத்திற்கு செல்ல தடுப்புகள் அமைக்கப்படவில்லை. பக்தர்களை முறைப்படுத்தி அனுப்பவும் ஆட்களில்லை. மேலும், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சரவணன், திருச்செங்கோடு கோவிலையும் கூடுதல் பொறுப்பாக கவனிப்பதால், முக்கிய விசேஷ நாட்களில் முடிவெடுக்க முடியாமல் ஊழியர்கள் திணறுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.