சூரியனின் இயக்கம் அயனம். அவன் தெற்கு நோக்கி இயங்குவது தட்சிணாயனம். வடக்கு நோக்கி இயங்குவது உத்தராயனம். இவை இரண்டில் உத்தராயனம் உயர்ந்தது என்பர். தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி. மேலும், உத்தராயனத் தொடக்கப் புனித நாள் டிசம்பர் 21. இத்திருநாள் மார்கழியின் ஒருநாள். இந்த நாளில் சில கோயில்களில் சிறப்பு பூஜைகளை செய்கின்றனர். உத்தராயனத் தொடக்க நாளைத் தை மாதத்தில் கொண்டாடுகின்றனர் பலர். மார்கழி வந்தாலே எல்லா மகளிருக்கும் மகிழ்ச்சி பொங்குகிறது. விடியற்காலையில் எழுகின்றனர். குளிரிலும் மன உறுதியுடன் நீராடுகின்றனர். பனி தலையில் படிய வீட்டையும், முற்றத்தையும் பெருக்கி தூய்மைப்படுத்துகின்றனர். சாணத்தால் முற்றத்தை மெழுகுகின்றனர். தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரிக்கின்றனர். கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து. அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர். விளக்கேற்றுகின்றனர். எல்லா முற்றங்களும், வீடுகளும் லட்சுமிகரமாகப் பொலிகின்றன. பூசணிப் பூவின் மஞ்சள் நிறம், மங்கலத்தின் சின்னம். சாணத்தில் பூசணிப்பூ... என்ன காரணம்? பூவுக்கு ஆதாரம் சாணமா? இல்லை. ஒருபிடி சாணத்தில் பிள்ளையாரைப் பிடிக்கின்றனர். பூக்கின்றபோதே காய்க்கின்ற பூசணிப்பூவை, வழிபடுகின்றபோதே அருளுகின்ற பிள்ளையாரின் திருமுடிமேல் சூட்டுகின்றனர். பிள்ளையார் அனைவருக்கும் அருள்வதற்கு பிரசன்னமாகிறார். கோலத்தின் வெண்மை-பிரம்மன்; சாணத்தின் பசுமை-விஷ்ணு; செம்மண்ணின் செம்மை-சிவன். முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் மும்மூர்த்திகளை நினைவுபடுத்துகின்றன. எங்கும் பக்தி; எதிலும் தெய்வீகம். இவை அனைத்தும் மார்கழியின் சிறப்புகள்.