பதிவு செய்த நாள்
18
டிச
2020
10:12
சபரிமலை:சபரிமலையில், டிச., 20 முதல், நாள்தோறும், 5,000 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக, கேரள மாநிலம் சபரிமலையில், பக்தர்கள் தரிசனம், ஆன்லைன் முன்பதிவு வாயிலாக கட்டுப்படுத்தப் பட்டது.கார்த்திகை, முதல் தேதியிலிருந்து, வார நாட்களில், 1,000, வார இறுதி நாட்களில், 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.இந்த மாத துவக்கத்தில், இது, முறையே, 2,000, 3,000 என அதிகரிக்கப்பட்டது. குறைவான பக்தர்கள் வருகையால், வருமானம் பெருமளவு குறைந்தது.
பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, பல்வேறு ஹிந்து அமைப்புகள், கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள், வரும், 20 முதல், தினசரி பக்தர்கள் எண்ணிக்கையை, 5,000 ஆக உயர்த்தி உத்தரவிட்டனர். 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா, நெகடிவ் சான்றிதழுடன் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு நிபந்தனைகளும், பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேவசம் போர்டு தலைவர் வாசு கூறுகையில், நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்க வில்லை, 5,000 பேர் தரிசனம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்த, தேவசம்போர்டு தயாராக உள்ளது, என்றார்.இதற்கான முன்பதிவு, இன்று அல்லது நாளை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.