பதிவு செய்த நாள்
24
டிச
2020
08:12
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்க வாசல் திறப்பு விமரிசையாக நடத்தப்படும்.
அந்த வகையில், இந்தாண்டிற்கான சொர்க்க வாசல் திறப்பு, நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன் விபரம் வருமாறு: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு முன்பதிவு செய்த, 3,000 நபர்கள், காலை, 6:15 மணி முதல் அனுமதிக்கப்படுவர். அவர்களுக்காக, கிழக்கு கோபுர வாசல் வழியாக, குளத்தின் அருகில் வரிசை அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு, தெற்கு மாடவீதி வழியாக, 100 ரூபாய் கட்டண தரிசனம் அனுமதிக்கப்படும். மேற்கு கோபுர வாசல், பேயாழ்வார் கோவில் தெரு வழியாக அமைக்கப்பட்டுள்ள வரிசையில், பரமபத வாசல் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். சொர்க்க வாசல் திறப்பை, பக்தர்கள் கண்டுகளிப்பதற்காக, நான்கு மாட வீதிகளிலும், எல்.இ.டி., வீடியோ ஸ்கிரீன் அமைக்கப்படுகிறது. பக்தர்கள் பாதுகாப்பிற்கு, 32 இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. அவற்றின் மூலம், கோவில் உட்பகுதியிலும், கட்டுப்பாட்டு அறையிலும் கண்காணிக்கப்படும். பக்தர்கள் வசதிக்காக, இலவச குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதுகாப்பு காரணமாக, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோய் உள்ளவர்கள், கர்ப்பிணியர், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.