மயிலாடுதுறை: திருஇந்தளுர் பரிமளரெங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் தங்க ரத்தின அங்கியில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளுரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் ஆலயம், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுல் இது, ஐந்தாவது ஆலயமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வதுமான இந்த ஆலயத்தில் ஏகாதேசியை முன்னிட்டு, இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெருமாள் தங்க ரெத்தின அங்கியில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப்பின், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். திரளான பக்தர்கள் இதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதுபோல சீர்காழி தாடாளன் பெருமாள் என்றழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை 3:00 மணிக்கு நடைபெற்றது இதனையொட்டி பெருமாள் தங்க ரத்தின அங்கி அலங்காரத்தில் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளினார் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டுக்கு ஒருநாள் மட்டுமே காணக்கூடிய பெருமாளின் வலது பாதத்தை கண்டு தரிசித்தனர்.