பதிவு செய்த நாள்
25
டிச
2020
10:12
புதுடில்லி சபரிமலை அய்யப்பன் கோவிலில், தினமும், 5,000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற, கேரள உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அம்மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
மண்டல பூஜை: இம்மாநிலத்தில் உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜை நடக்கும், டிசம்பர் -- ஜனவரி மாதங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்தாண்டு பக்தர்கள் வருகையில், பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்தது. கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே, கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வார நாட்களில், நாள் ஒன்றுக்கு, 1,000 பக்தர்களும், சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில், 2,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில், பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து, சபரிமலை அய்யப்பன் கோவிலில், தினமும், 5,000 பக்தர்களை அனுமதிக்கும்படி, சமீபத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது: சபரிமலை அய்யப்பன் கோவிலின் மண்டல பூஜை காலமான, டிச., 20 முதல், அடுத்த மாதம், 14 வரையில், பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக, மாநில தலைமைச் செயலர் தலைமையில், உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
ஆபத்தை ஏற்படுத்தும்: இந்த கமிட்டி நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், தினமும், 5,000 பேரை அனுமதிக்க வேண்டும் என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது, ஆபத்தை ஏற்படுத்தும்.சபரிமலை கோவிலில் பணியில் இருந்த போலீசார், சுகாதார பணியாளர்கள், பக்தர்கள் என, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், பக்தர்கள் எண்ணிக்கையை உயர்த்தி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. இதன் வாயிலாக, கோவிலுக்கு வரும் பக்தர்களை கட்டுப்படுத்துவதில், போலீஸ் மற்றும் சுகாதார பணியாளர்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.