பதிவு செய்த நாள்
25
டிச
2020
05:12
பல்லடம்: கோவில் திருப்பணிக்கு ஐகோர்ட் விதித்துள்ள இடைக்கால தடையை, மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும், அறநிலைய துறைக்கு உட்பட்டு, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து, கோவில்களை இடிக்கவும், திருப்பணி மேற்கொள்ளவும் ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. கோர்ட் உத்தரவை தொடர்ந்து, திருப்பணி மேற்கொள்ள தயாராக இருந்த கோவில்களின் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால், பாதிப்படைந்த கோவில் கமிட்டி, மற்றும் பக்தர்கள், இடைக்கால தடை குறித்து கோர்ட் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், புராதனங்களை பாதுகாக்கும் நோக்கில் ஐகோர்ட் விதித்த தடை உத்தரவு வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழகம் முழுவதும் அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 40 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்களில், பழமை வாய்ந்த கோவில்கள் மிகவும் குறைவானவையே. இதர கோவில்கள் அனைத்தும் உள்ளூரில் பிரசித்தி பெற்று, அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மட்டுமே வழிபடும் கோவில்களாக உள்ளன. இது போன்ற ஆயிரக்கணக்கான கோவில்களில் புராதன, வரலாற்று சிறப்புகள் எதுவும் கிடையாது. ஐகோர்ட் விதித்துள்ள இடைக்கால தடை உத்தரவு, அறநிலைய துறைக்கு உட்பட்ட அனைத்து கோவில்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. தடை உத்தரவால், ஏற்கனவே திருப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்ட கோவில்களின் பணிகளும் நின்றுள்ளன. கோவில் திருப்பணியை ஏற்று நடத்துவது என்பது எளிய காரியம் அல்ல. இச்சூழலில், தடை உத்தரவு சாதாரண கோவில்களின் திருப்பணிகளை பாதிப்பதாக உள்ளது. இடைக்கால தடை உத்தரவு குறித்து நீதிபதிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். புராதன கோவில்களை தவிர்த்து, இதர கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள ஐகோர்ட் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.