திருக்கோஷ்டியூரில் மூன்று நிலைகளில் பெருமாள் எழுந்தருளல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2020 11:12
திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நேற்று பெருமாள் காலையில் சயன கோலத்திலும், மாலையில் அமர்ந்த நிலையிலும் இரவில் நின்ற நிலையிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவில் தங்கத் தோளுக்கினியானில் பரமபதவாசல் எழுந்தருளினார். சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மார்கழி உற்ஸவத்தை முன்னிட்டு நடந்த பகல் பத்து உற்ஸவம் நிறைவடைந்து நேற்று வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு காலை 10:30 மணிக்கு உற்ஸவ பெருமாள் மூலவர் சன்னதியில் திருமாமணி மண்டபத்தில் சயனகோலத்தில் எழுந்தருளினார்.ஆண்டுக்கு ஒரு முறை வைகுண்ட ஏகாதசியன்று நடைபெறும் இந்த அலங்காரத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 7:30 மணிக்கு ஆதிசேஷன் வாகனத்தில் அமர்ந்த நிலையில் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இரவு 10:30 மணிக்கு மேல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு தங்கப் பல்லக்கில் பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் பரமபத வாசலைக் கடந்து சென்றார். ஆழ்வாருக்கு மங்களாசாஷனம் நடந்தது. தொடர்ந்து ஏகாதசி மண்டபத்தில் பத்தி உலாத்துதலும், அடுத்து தென்னை மரத்து வீதியில் புறப்பாடும் நடந்தது. இன்று முதல் இரவு பத்து உற்ஸவம் நடைபெறும். தினசரி இரவு 7.30 மணிக்குபெருமாள் தாயார் சன்னதி எழுந்தருளி பரமபத வாசல் திறக்கப்படும். பின்னர் தென்னை மரவீதி புறப்பாடு நடைபெறும்.திருப்புத்துார் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் காலை மூலவர் பெருமாள் தேவியருடன் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து காலை 9:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பல்லக்கில் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து கோயிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மூலவர் யோகநாராயணப் பெருமாள், மூலவர் மகாலெட்சுமி தாயார் சந்தனக் காப்பில் அருள்பாலித்தனர். ஆடல் வல்லான் சன்னதியில் நின்ற கோலத்தில் திருப்பதி வெங்கடாசலபதி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.