பதிவு செய்த நாள்
26
டிச
2020
03:12
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, தேவாலங்களில் சிறப்பு திருப்பலிகள் நடந்தன.மேட்டுப்பாளையம், புனித அந்தோணியார் தேவாலயத்தில், மூன்று சிறப்பு திருப்பணிகள் நடந்தன.பங்கு பாதிரியார் ரொசாரியோ, குழந்தை இயேசுவின் சுரூபத்தை ஏந்தி, புதிதாக அமைத்த குடிலில் வைத்தார். பின், திருப்பலியை நிறைவேற்றினார். திருப்பலியில், பாதிரியார் ரஞ்சித், டீகன் ஜானி சகாயராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் வேளாங்கண்ணி நகரிலுள்ள, அற்புதக்கவி ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில், பங்கு பாதிரியார் ஜேக்கப் தலைமையில் சிறப்பு திருப்பணிகள் நடந்தன.* மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ., தேவாலயத்தில், இரண்டு சிறப்பு திருப்பலிகள் நடந்தன. பங்கு பாதிரியார்கள் ரெவரன்ட் கோபிநாத் சாமுவேல், ஜேக்கப் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர்.* அன்னுார், சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் தேவாலயத்தில், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, ஆராதனை துவங்கி, 6:30 மணி வரை நடந்தது. இதில், ஆயர் சேகர், கிறிஸ்மஸ் சிறப்பு செய்தி அளித்தார். ஆலய செயலாளர் ஜெயபிரகாஷ், பொருளாளர் பிரபு உள்பட திரளான கிறிஸ்தவர்கள் ஆராதனையில் பங்கேற்றனர்.பண்டிகையை முன்னிட்டு, இரு தினங்களுக்கு முன், ஏழைகளுக்கு, புத்தாடைகள் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் மாலை முதல், நேற்று காலை வரை, மின் விளக்குகளால், தேவாலயம் ஜொலித்தது.கெம்பநாயக்கன்பாளையம், சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் தேவாலயத்தில், நள்ளிரவு 12:00 மணிக்கு, துவங்கி, அதிகாலை 2:00 மணி வரை ஆராதனை நடந்தது. ஆயர் காட்வின் ஜாய்சன், சிறப்பு செய்தி அளித்தார். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் சாய் செந்தில் தலைமையில், ஊராட்சி தலைவர் தங்கராஜ், மற்றும் அ.தி.மு.க.,வினர், இனிப்பு வழங்கினர்.
வாலிபர் ஐக்கிய சங்க பொருளாளர் குணசேகரன், உறுப்பினர்கள் சதீஷ்குமார், பிரபுராஜ், ரெஜினா உட்பட பலர் பங்கேற்று, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.* கருமத்தம்பட்டி புனித மரியன்னை தேவாலயம், சூலுார் சி.எஸ்.ஐ., உட்பட பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில், நள்ளிரவு ஜெபம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். நண்பர்கள், உறவினர்களுக்கு, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.* துடியலுார் கிரேஸ் ஏ.ஜி., சபையில், போதகர் தேவதாசன் தலைமையில் விழா கொண்டாடப்பட்டது. அகில இந்திய குடும்ப ஜெப ஐக்கியம் சார்பில், போதகர் எட்வின் நற்செய்தி வழங்கினார். சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் தேவாலயம், லுத்ரன் தேவாலயம், விஸ்வநாதபுரத்தில் உள்ள மாராநாதா திருச்சபை உட்பட பல இடங்களில், விழா கொண்டாடப்பட்டது.