பதிவு செய்த நாள்
26
டிச
2020
05:12
காரைக்கால்: திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு உற்சவர் சனீஸ்வர பகவான் மூன்றாம் பிரகாரம், வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி காக வாகனத்தில் அருள்பாலித்தார்.
காரைக்கால், திருநள்ளாறில், உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான், தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. அதிகாலை, 5:22 மணிக்கு சனி பகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு உற்சவர் சனீஸ்வர பகவான் மூன்றாம் பிரகாரம் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி காக வாகனத்தில் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிபகவானுக்கு கோவில் அர்ச்சகர் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகள் மற்றும் மஹா தீபாராதனை நடத்தினார்.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கொரோனா கட்டுப்பாடுகளுடன், கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளது. பக்தர்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60வயது முதியோர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். நளன் குளத்திற்கு செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.சனிப்பெயர்ச்சி விழா பாதுகாப்புக்கு, காரைக்கால், புதுச்சேரியைச் சேர்ந்த, 2,200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கவர்னர் உத்தரவு: கவர்னர் கிரண்பேடி, சமூக வலைதளத்தில் விடுத்துள்ள பதிவு: இன்று, 26ம் தேதி மற்றும் நாளை, 27ம் தேதி, திருநள்ளாறு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்றுச் செல்ல வேண்டும். சனீஸ்வரர் கோவில் வழிபாட்டு தலம். எனவே, கொரோனா தொற்று இல்லை என முடிவு தெரிந்த பின் கோவிலுக்கு செல்லுங்கள். தொற்று இல்லை என்ற சான்றிதழை, உடன் வைத்து கொள்ளவும். கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால், விழாவை நேரடியாக காணொலியில் காணுங்கள். இதற்காக, சிறந்த கேமராக்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.சனிப்பெயர்ச்சி விழாவை ஒளிபரப்பும் ஊடகங்கள் சார்பில் செல்லும் நபர்களும், கொரோனா பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.