பதிவு செய்த நாள்
31
டிச
2020
04:12
சித்ரதுர்கா : "கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில், அரசு விதிமுறைகள் வகுத்துள்ளது. பொது மக்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றி, முன்னெச்சரிக்கையுடன் புத்தாண்டு கொண்டாட வேண்டும்," என, சித்ரதுர்கா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சித்ரதுர்கா மாவட்ட கலெக்டர் கவிதா மன்னிகேரி, நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியதாவது:கொரோனா பரவுவதால், பொதுமக்கள் புத்தாண்டை எளிமையாக கொண்டாடுவது நல்லது. கொரோனாவை கட்டுப்படுத்த, அரசின் விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.பொது இடங்களில், ஆடம்பரமாக புத்தாண்டை கொண்டாடினால், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே பொது இடங்களில், புத்தாண்டு கொண்டாடுவது, கை குலுக்குவது, கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிப்பதை, அரசு தடை செய்துள்ளது.டிச., 30 முதல் ஜனவரி 2 வரை, பப்கள், கிளப்கள், ரெஸ்டாரென்டுகளில், புத்தாண்டு பார்ட்டி நடத்துவது, சமூக விலகல் இன்றி மக்கள் ஒன்று கூடுவது கூடாது. ஆனால் இங்கு வழக்கமான வியாபாரத்துக்கு, எந்த கட்டுப்பாடும் இல்லை. மேலும், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் வீட்டிலேயே இருக்க வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது கட்டாயம்.பப், ஓட்டல்கள், மால்கள், ரெஸ்டாரென்ட்களில், கிருமி நாசினி, உடல் வெப்ப நிலையை பரிசோதிப்பது போன்ற வசதிகள் இருக்க வேண்டும். இவற்றின் உரிமையாளர்கள், அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளர்கள் சமூக விலகலை பின்பற்றி, வரிசையில் உள்ளே நுழைய வசதி செய்யலாம். ஆன்லைன் மூலம் இருக்கை முன் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யலாம்.பொது மக்களின் ஆரோக்கியத்த கருதி, சுகாதாரத்துறை, போலீஸ் துறை, நகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை, மாவட்ட நிர்வாகம் உட்பட, வெவ்வேறு துறைகள் பிறப்பித்த உத்தரவு மற்றும் விதிமுறைகளை பின் பற்ற வேண்டும். மீறுவோர் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.