Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » வாயு புராணம்
வாயு புராணம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 மே
2012
05:05

1. தோற்றுவாய்: புராணங்கள் முதன்முதலில் பிரம்மாவால் கூறப்பட்டது. இவற்றை அறிவதன் மூலம் வேதங்கள், உபநிஷத்து களை நன்கு அறிய உதவும் என்று கூறுகிறது வாயுபுராணம். 18 புராணங்களில் வாயு புராணம் சேர்ந்தா? இல்லை-சிவபுராணம் சேர்ந்ததா? என்பதில் ஐயப்பாடு உள்ளது. மச்சபுராணம், நாரத புராணங்களில் வாயு புராணம் நான்காவதாகக் கூறப்பட்டுள்ளது. எது எப்படியாயினும் வாயுபுராணமும் முக்கியமானதாகவே கருதப்படுவதால் இந்தப் பதினெண் புராணங்களுடன் வாயு புராணமும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே 18 என்பதை 19 என்று கொள்ளலாம். புராண லக்ஷணங்களாகக் கூறப்படும் ஐந்து முக்கிய பகுதிகளும் விஷ்ணு புராணத்தில் உள்ள. வேதவியாசர் எழுதின மூல புராணத்தொகுப்புக்கு புராண சம்ஹிதை எனப்பெயர். பரீக்ஷித்தின் குலத்தோன்றல் ஆதிசிம கிருஷ்ணன் அரசாட்சியின் போது வாயு புராணம் கூறப்பட்டது.

வாயு புராணம் சராசரி அளவு உடையது. இது பூர்வ பாகம், உத்தர பாகம் என்று இரண்டு பெரும் பிரிவுகளும் 112 அத்தியாயங்களும், 24,000 ஸ்லோகங்களும் கொண்டது. இது வாயுபகவானால் கூறப்பட்டது எனவே வாயு புராணம் எனப்பட்டது. புராணத்தை ஆரம்பிக்குமுன் நாராயணன், சரசுவதி, வேதவியாசர், சிவபெருமான், பிரம்மா, வாயு ஆகியோரைப் பிரார்த்திப்போம். திருஷத்வதி ஆறு பாயும் புனித குரு÷க்ஷத்திரத்தில் ஆதிசிம கிருஷ்ண மன்னன் காலத்தில் முனிவர்கள் யாகங்கள் செய்து வந்தனர். அங்கு சூதமுனிவர் வந்து சேர்ந்தார். மித்ருக்களின் குலத்தில் வாசவி பிறந்தான். அவனுக்கு மச்சம் (மீன்) ஆகுமாறு சாபம் இருந்தது. அவருடைய மகள் சத்தியவதி. சத்தியவதியின் மகன் வேதவியாசர். நைமிசாரணியத்து முனிவர்களுக்கு வாயு கூறிய வாயு புராணத்தை நான் உங்களுக்குக் கூறுகிறேன் என்றார் சூதமுனிவர். புரூரவ மன்னன் ஆட்சிக்காலத்தில் நைமிசாரணியத்து முனிவர்கள் பிருகஸ்பதி தலைமையில் பல யாகங்கள் செய்தனர். அந்த யாகங்கள் 12 ஆண்டுகள் நடைபெற்றன. யாகங்கள் முடிந்தபின் வாயு பகவான் முனிவர்களுக்கு வாயுபுராணத்தைக் கூறினார்.

2. சிருஷ்டி

சிருஷ்டி பற்றி மற்ற புராணங்களில் உள்ள செய்தியே இதிலும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கல்பம் வராஹ கல்பம் எனப்படுகிறது. கல்ப முடிவில் பிரளயம் ஏற்பட்டு எங்கும் நீர் சூழ்ந்திருக்க, பிரம்மா படைப்புத் தொழிலைத் தொடங்க நிலப்பரப்பு இல்லாமல் இருக்க, விஷ்ணு வராக அவதாரம் எடுத்து நீர்க்கடியில் சென்று தனது நீண்ட கோரைப்பற்களால் பூமியைப் பெயர்த்து எடுத்து வந்து நீரில் மிதக்கவிட்டார். உலகில் மலைகள், நதிகள் போன்றவை படைக்கப்பட்டன. மலைகள் நகராமல் நிலைத்திருப்பதால் அசலம் எனப்பட்டன (வெங்கடாசலம், இமாலயம்) அவற்றின் பர்வங்கள் (அ) தொடர்கள் நிறைந்திருக்க மலைகள் பர்வதங்கள் எனப்பட்டன. இவ்வாறு விஷ்ணுவின் வராஹ அவதாரத்துக்குப் பின் உலகம் படைக்கப்பட்டதால் இந்தக் காலம் வராக கல்பம் எனப்பெயர் பெற்றது. ஒவ்வொரு கல்பத்திலும் பதினான்கு மன்வந்தரங்கள், அவை ஒவ்வொன்றும் ஒரு மனுவால் ஆளப்பட்டன. ஒவ்வொன்றிலும் வெவ்வேறு, இந்திரன், தேவர்கள், சப்தரிஷிகள் இருந்தனர்.

யுகங்கள் : ஒரு மன்வந்தரத்தில் 71 மகா யுகங்கள். 4 யுகங்கள் கொண்டது ஒரு மகாயுகம். வெவ்வேறு யுகதர்மங்கள், நாகரிக வளர்ச்சி, மக்கள் நிலை, கல்பக விருக்ஷம் போன்ற செய்திகள், நான்குவித வருணங்கள், வருணாசிரம தர்மங்கள், சதுர்வித புருஷார்த்தங்கள் அறம், பொருள், இன்பம், வீடு போன்றவை இதிலும் கூறப்படுகின்றன. பிரம்மாவுக்கு பத்து மானசிக புத்திரர்கள். அவர்களில் ஒன்பதுபேர் முனிவர்கள், பிராமணர்கள். பிரம்மன் தானே ஆண், பெண் என இரு கூறாகி படைப்புத் தொழிலைத் தொடர்ந்தார். அவ்விருவர் ஸ்வாயம்பு மனு, சத ரூபை அவர்கள் வழிவந்த தக்ஷனின் 24 புத்திரிகள் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்குத் தாயார்கள் ஆயினர். சிவபெருமானையும், படைப்புத்தொழில் செய்யுமாறு பிரம்மா கூறிட அவர் அழியாத உயிர்களாகிய ருத்திரர்களைப் படைத்தார். அவர்களுக்கு யாகங்களில் அவிர்ப்பாகம் உண்டு எனப்பட்டது. வாயு புராண சுலோகம் ஒன்றில் கீழ்கண்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஒரு பெண் வெள்ளாடு-சிவப்பு, வெண்மை, கருப்பு நிறங்கள் கொண்டு அழகாய் இருந்தது. அதற்குப் பல குட்டிகள் இருந்தன. அதைப் பின் தொடர்ந்து ஓர் ஆண் ஆடு சுகம் அனுபவிக்கச் சென்றது. அதைக் கண்ட மற்றொரு ஆண் வெள்ளாடு, இது மற்றவர்களால் சுகம் அனுபவித்து பின்னர் பிரவசம் முதலான துக்கங்களையும் அனுபவிக்கிறது. இத்தகைய சுகம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யோசித்துக் கொண்டே பெண் ஆட்டை விட்டு விலகி தூரமாகச் சென்றது. இவற்றில் பெண் ஆடு பிரகிருதி. அதன் குட்டிகள் இயற்கையினால் தோன்றிய உயிர்கள். அதன் உடல் மீதுள்ள வெண்மை நிறம் சத்துவ குணத்தையும், சிவப்பு ரஜோகுணத்தையும், கருப்பு தமோ குணத்தையும் குறிக்கின்றன. இந்த நிறங்களைக் கண்டு மோகம் கொண்ட ஆண் ஆடு புருஷன் சம்சாரி. கவர்ச்சிக்கு சிறிதும் மனம் சலியாத இரண்டாவது ஆண் ஆடு மூன்று குணங்கள் நிறைந்த பரமபுருஷன். அதாவது பகவானை அடைய விரும்பும் ஞானிகள் கூட மாயாரூபம் கொண்ட சம்சாரத்தில் சிக்கி பிரம்மான நிஷ்டர்களாய் இருப்பர். அப்படிப்பட்டவர்களே சனக, சனந்தாதி முனிவர்கள்.

3. அஷ்டாங்க யோகம்

பிராணாயாமம் தவத்திற்கும் யோகத்திற்கும் முதல் படி. இது மூன்று வகை. 1) பன்னிரெண்டு மாத்திரை காலம் செய்வது மந்தம் ஆகும்; 2) இருபத்தோரு மாத்திரை காலம் செய்வது, அதாவது கும்பத்தில் இருத்தல் மத்திமம். 3) முப்பத்தாறு மாத்திரை நேரம் செய்வது அதாவது கும்பத்தில் இருப்பது உத்தமம். பிராணாயாமத்தில் மூன்று விதிகள். 1) காற்றை உள்ளிழுப்பது பூரகம், 2) உள்ளே இருத்துவது கும்பகம், 3) வெளிவிடுவது ரேசகம் ஆகும். இடது மூக்குத் துவாரம் வழியாக காற்றை உள்ளிழுத்து, சிறிது நேரம் உள்நிறுத்தி பின்னர் வலது மூக்குத் துவாரம் வழியே வெளியிடுவது; பின்னர் மாற்றி வலது மூக்குத் துவாரம் வழியே இழுத்து, நிறுத்தி இடது துவாரம் வழியே வெளிவிடுவது. இது பிராணாயாம வியவஸ்தை எனப்படும். பிராணாயாமம் செய்வதன்மூலம் நம் உயிரை நாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள இயலும்.

யோகம் ஐந்து படிகளைக் கொண்டது:

1. பிராணாயாமம்
2. பிரத்தியாகாரம் : பிராணாயாமத்தினால் உட்கொண்ட வாயுவை, நிலைநிறுத்திச் செயலற்றுப் புறக்காரிய நிகழ்ச்சிகளை ஒதுக்கியிருத்தல் பிரத்தியாகாரம் ஆகும்.
3. தாரணை : பொறி புலன்களில் செல்லாது அடங்கிய மனத்தினை ஒரு வழி நிறுத்தி உள்முகமாக ஆராய்தல் தாரணை ஆகும்.
4. தியானம் : தாரணையினால் மனமானது ஒரு பொருளில் நிலைத்த பின் அந்த நிலையினின்றும் மாறாமல் இருப்பது.
5. சமாதி : சமம்+ஆதி=அதாவது ஆதிக்குச் சமமாக, பிரமமாக இருத்தல். அட்டாங்க யோகத்தின் இறுதி நிலை சமாதியாகும்.

4. சிவனின் எண் பெயர்கள்

ஒரு சமயம் பிரம்மன் தன்னைப் போல் ஒரு மகன் தோன்ற வேண்டும் என்று நினைக்க, அவர் தொடைமீது நீலலோகித நிறமுடைய குழந்தையாக ஒரு குழந்தை தோன்றி அழ ஆரம்பித்தது. அப்போது அழுகைக்குக் காரணம் கேட்க, ஒரு பெயர் வைக்குமாறு வேண்ட அதன் பெயர் ருத்திரன் என்று கூறிட, ஒரு பெயர் போதாது என்று எட்டுப் பெயர்கள் வைத்தார்.

1. ருத்ரன் : இருக்குமிடம் சூரியன். சூரியன் சகல சராசரங்களுக்கு ஆத்ம சொரூபன். இவ்வுலகம் தோன்றுவதற்குக் காரணமானவன் அவன் உடல் ரவுத்திரம் மனைவி பெயர் சுவர்ச்சலை. மகன் சனி.

2. பவன் : இவன் நீரில் உள்ளான். சிருஷ்டி அனைத்தும் நீரின் மீது நிற்கின்றன. சிருஷ்டி ரகசியம் அறிந்தவன். உடல் நார். மனைவி உஷா. மகன் சுக்கிரன்.

3. சிவன் (அ) சர்யன் : இருக்குமிடம் பூமி. நாம் வசிப்பதற்கு ஆதாரமாக உள்ளது பூமி. உடல் சார்வம். மனைவி விகேசி. மகன் அங்காரகன்.

4. பசுபதி : இருக்குமிடம் அக்கினி. நம் உடலில் ஜாடராக்கினி வடிவில் உள்ளான். உடல் வைச்வா நரம்பு, மனைவி சுவாஹா தேவி. மகன் கந்தன்.

5. ஈச்வரன் : இவரது இடம் வாயு. இது உயிர்களின் உடலில் பிராணவாயு, அபான வாயு, விதான வாயு, உதான வாயு, சமான வாயு வடிவில் இருந்து உயிரை வாழ வைக்கிறது. இவரது உடல் ஈசானியம் (வடகிழக்கு) மனைவி சிவை. மகன் மனோஜவன்.

திசைகள்-பாலகர்-அவர்தம் நகரம்-சூரியன் செல்லும் வேளை

1. கிழக்கு-இந்திரன்-அமராவதி-உதயம், நண்பகல், அஸ்தமனம், நள்ளிரவு
2. தெற்கு-யமன்-சம்யமனி-நள்ளிரவு, உதயம், நண்பகல், அஸ்தமனம்
3. மேற்கு-வருணன்-சுகி-அஸ்தமனம், நள்ளிரவு, உதயம், நண்பகல்
4. வடக்கு-சந்திரன்-அலகாபுரி-நண்பகல், அஸ்தமனம், நள்ளிரவு, உதயம்

6. பீமன் : இடம் ஆகாயம். நம் உடல் துவாரங்களில் பரவி இருக்கிறான். உடல் பீமம். பத்து திசைகள் மனைவியர்; மகன் ஸ்வர்க்கன்.

7. உக்கிரன் : இடம் யாக தீட்சை கொண்ட எஜமானன். யாகத்தின் மூலம் தேவதைகளையும், அதன் மூலம் சர்வாந்தர்யாமியான பகவானைத் திருப்தி செய்தல். உடல் உக்கிரம்; மனைவி தீøக்ஷ. மகன் சந்தானன்.

8. மகாதேவன் : இடம் சந்திரன். அவ்வடிவில் ஒளடதங்களுக்கு அதிபதியாகி அவற்றைப் பெருகச் செய்து உயிர்களுக்கு அன்னதாதா ஆதல். உடல் சாந்திரமசம்; மனைவி ரோஹிணி. மகன் புதன். சூரியன் தனது கிரணங்களால் பூமி, கடல்களிலுள்ள நீரைக் கிரகித்து மேகத்தில் இருத்தும். அந்த மேகங்கள் ஆவஹம், பிரவஹம், உத்வஹம், ஸம்வஹம், விவஹம், பரிவஹம் என்ற ஏழு விதங்களான வாயுக்கள் மூலம் இழுத்துக் கொள்ளும்.

5. திக்பாலகர்கள், அவர்களது நகரங்கள்

மேரு மலையின் மேற்பகுதியில் மானசரோவரம் உள்ளது. அதைச் சுற்றிலும் திக்குப் பாலகர்களின் நகரங்கள் உள்ளன.

கிரகங்கள்: விண்மீன்கள்-கிரகங்கள்-சந்திரன் முதலிய சோதிர் மண்டலத்திலுள்ள அனைத்தும் சூரியனிலிருந்து தோன்றியவையே. சூரிய கிரணங்கள் பல. முக்கியமானவை ஏழு. அந்த ஏழிலிருந்து ஏழு கிரகங்கள் தோன்றின.

கிரணம்-கிரகம்

1. ஹரிகேசவன்-தானேயானது சூரியன்.
2. சுப்ஸம்ன-வளர்ச்சி, தேய்வு சந்திரன் உடையது.
3. சம்பத்வசுவு-குஜன் (அ) அங்காரகன்.
4. விச்வகர்ம-புதன்.
5. அர்வாவசுவு-பிருகஸ்பதி.
6. விச்வச்ரவன்-சுக்கிராச்சாரியார்.
7. சுவராட்டு-சனி.

விண்மீன்கள் எனும் நட்சத்திரங்களும் சூரியனின் பிரபாவத்தால் உலகம் அழியினும் இவை அழியா என்பதால் நட்சத்திரங்கள் எனப்பட்டன. சூரியன் விண்மீன்களைத் தன்னுள் கொண்டிருப்பதால் அதுவும் ஒரு நட்சத்திரமே. புண்ணியம் செய்து விண்ணுலகம் அடைவோர்க்கு வீடு போன்றவை என்பதால் கிரகங்கள் என்ற பெயர் ஏற்பட்டது. வெண்மை நிறம் கொண்டுள்ளதால் நட்சத்திரம் எனப்பெயர் பெற்றன. இருளைத் தன்னுள் மறைத்து ஒளி தருவதால் சூரியனுக்கு ஆதித்தியன் என்று பெயர். ஒளி, மழை பொழியச் செய்வதால் சவித என்று பெயர். உலகுக்கு மகிழ்ச்சி அளித்து, அமுதைப் பொழிவதால் சந்திரன் என்று பெயர். சூரியனது ஒளிமண்டலம் சந்திரனது மேக மண்டலம் என்று பெயர். ராகு, கேதுக்கள் நிழல் கிரகங்கள் (சாயா கிரகங்கள்) ஆகும்.

6. யாஜ்ஞவல்கியர் சரிதம்

மிதிலை நகரை ஆண்டு வந்த ஜனகமகாராஜன், வித்தியா தத்துவம் அறிந்த பிரம்ம ஞானி யார்? என்றறிய மகரிஷிகளை எல்லாம் வரவழைத்து வித்வத்பரிஷத்து ஒன்றை ஏற்பாடு செய்தான். ஆயிரம் பசுக்கள், பொன், ரத்தினம், அக்கிரகாரம், பணியாட்கள், முதலியவற்றை வெகுமதியாக அறிவித்து, அந்தப் பரிஷத்தில் யார் மகா வித்வானோ? யார் பிரம்ம ஞானியோ? அவருக்கு இந்த வெகுமதிகள் அனைத்தும் உரியவை என அறிவித்தான். அவ்வமயம் அங்கே மகாபண்டிதரான யாஜ்ஞவல்கியர் வந்தார். அங்கு நடந்தன யாவும் அறிந்து சீடனை அழைத்து அந்த வெகுமதிகள் அனைத்தையும் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு கூறினார். அதைக்கண்ட அனைவரும் வியப்பும், குரோதமும் அடைந்தனர். உடனே அனைவரும் யாஜ்ஞவல்கியரிடம் ஆயிரக்கணக்கில் கேள்விகள் கேட்க, அனைத்திற்கும் அவர் சரியான பதில்கள் பகன்றார். பின்னர் அவர் மற்றவர்களைப் பல கேள்விகள் கேட்க அவர்கள் விடை சொல்ல முடியாமல் தவிக்க யாஜ்ஞவல்கியர் வாதில் வெற்றி பெற்றார். அவர் வெகுமதிகளை எடுக்கப் போகையில் சாகல்யன் என்னும் முனிவர் தன்னை வெல்லுமாறு கூற, தோற்றவர் உயிரை விட வேண்டும் என்ற நிபந்தனையுடன் வாதம் ஆரம்பித்து இப்போட்டியிலும் யாஜ்ஞ வல்கியரே வெற்றி பெற போட்டியின் நிபந்தனைப்படி தோற்ற சாகல்யமுனிவர் யோகசக்தி மூலம் உயிர்விட்டார். யாஜ்ஞவல்கியருக்கு இத்தனை உயர்ந்த ஞானம் எவ்வாறு ஏற்பட்டது? என்று ரிஷிகள் கேட்க வாயுதேவர் சொல்லலானார்.

ஒரு சமயம் மேரு மலையில் பிரம்மாவின் முன்னிலையில் ஒரு பிராம்மண பரிஷத்து நடைபெற்றது. அனைத்து முனிவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதில் பங்கு கொள்ளாதாவர் பிரம்மஹத்தி தோஷம் அடைவர் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. அச்சத்தில் எல்லோரும் தவறாமல் வந்து விட்டனர். வைசம்பாயன மகரிஷி மட்டும் போகவில்லை. அதனால் அவரை பிரம்மஹத்தி தோஷம் சேர்ந்திட அவர் தன் சீடர்களிடம் அந்தத் தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்படிக் கூறி தன்னை அப்பாவத்திலிருந்து விடுபடுமாறு செய்ய வேண்டினார். அப்போது அவர் சீடரான யாஜ்ஞவல்கியர் மகாமேதாவி. தவமகிமை பெற்றவர். அவர் குருவிடம் நான் ஒருவனே அதை ஏற்படுத்துகிறேன். மற்றவர்கள் வேண்டாம் என்று கூற, அவர் அகம்பாவத்தால் கூறியதாகக் கொண்ட குரு வைசம்பாயனர் அவரிடம் யாஜ்ஞவல்கியர் கற்ற யஜுர் வேதத்தைத் திருப்பித் தருமாறு கூறிட, அவரும் தான் கற்ற யஜுர் வேதத்தைக் கக்கினார். அதனால் ஒளியிழந்தவரான யாஜ்ஞவல்கியர், சூரியனை வேண்டி அவரை குருவாக இருந்து யஜுர் வேதத்தைக் கற்பிக்குமாறு வேண்ட சூரியனும் அவ்வாறே அருளினார். குதிரை வடிவில் சஞ்சரித்து சூரியனைப் பின் தொடர்ந்து சென்று யஜுர் வேதத்தைக் கற்றார் யாஜ்ஞவல்கியர். வாஜ் என்றால் குதிரை, வாஜி ஆக இருந்து இவர் கற்ற வேதசாகைக்கு வாஜஸநேய சாகை எனப்பெயர் பெற்றது. அதுவே சுக்கில யஜுர் வேதம் ஆகும். இவரது சீடர்களான கண்வர், வைதேயர், மத்யம், திசன், சாபேயன், உத்தவன் முதலியோர் இந்தச் சுக்கில யஜுர்வேத சாகையைப் பரப்பினர்.

7. தாயின் குணமே மக்களின் குணம்

காசியபரின் மனைவியருள் கசை என்பவள் ஒருத்தி, அவள் கோபம், அசிங்கமான சொற்கள், பொறாமை, துவேஷம், அசுத்தி போன்ற சர்வ தீயகுணங்களும் நிரம்பியவள். அதனால் காசியபர் அவள் எப்போது எதை வேண்டினும் அதனை அருள்வார். தனக்குக் குழந்தை இல்லாததால் மற்றவர்கள் ஏச்சுக்கும், பேச்சுக்கும் காரணமாகி இருப்பதை எடுத்துக் கூறி தனக்குப் புத்திர பாக்கியம் அருள வேண்டினாள். அதன்படி அவள் கருவுற்றாள். முழு மாதங்கள் நிறைந்ததும் ஒருநாள் அந்தி வேளையில் ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள். அந்தப் பாலன் நான்கு கரங்கள், நான்கு கால்கள், இரண்டு தலைகள், உடல் முழுவதும் ரோமங்கள், பெரிய மூக்கு, ஒழுங்கற்ற காதுகள், பானை போன்ற வயிறு என அசிங்கமான உருவத்துடன் சிவப்பு நிறத்துடன் பார்ப்பதற்குப் பயங்கரமாய் காட்சி அளித்தான். அவன் பிறந்த சமயம் அசுர சந்திவேளை ஆகும். மறுநாள் காலை சந்தி வேளையில் மற்றொரு மகனை ஈன்றாள். அதுவும் அசுரவேளையே. அந்தப் பாலனுக்கு மூன்று தலைகள், மூன்று கண்கள், மூன்று கால்கள், மூன்று கைகள், பரட்டை தலை, பெரிய மீசை, கல்லால் அடித்தாலும் கலங்காத கடினமான உடல்; இரண்டு நாக்குகள் என்று ஒழுங்கற்ற உருவுடன் அண்ணனைப் போலவே பயங்கரமாய் விளங்கினான்.

ஒரே நாளில் அவர்கள் உருவம் பெரியதாக அவர்களுக்குப் பயங்கர பசி எடுக்க, பெரியவன் தாயையே தின்ன முயல, இரண்டாம் மகன் அதைத் தடுத்தான். இதனால் கோபம் கொண்ட இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் அங்கு காசியபர் வர இருவரும் தாய் மடியில் சாதுவாகப் படுத்திருந்தனர். புத்திரர்கள் தாயின் குணங்களைப் பெற்று அம்மாவைச் சேவித்து உற்சாகப்படுத்துவர். பெண் தாய் தந்தையரை அனுசரித்து இருப்பாள் என்றார். அதுகேட்ட கசை பெரியவன் தன்னைத் தின்ன வந்ததையும், தம்பி தடுத்ததையும் கூறினாள். யக்ஷ=தின்னுதல் என்ற பெயருடைய யக்ஷன் என்ற பெயரைப் பெரியவனுக்கும், ரக்ஷ=காத்திடு; எனவே சின்னவனுக்கு ரக்ஷகன் என்றும் பெயரிட்டார். அவர்களுக்கு இரவில் காட்டு மிருகங்களின் மாமிசம், ரத்தமே உணவு என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்.

8. பலராமர் திருமணம்

குசஸ்தலீயைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த மனுவம்சத்தைச் சேர்ந்த மன்னன் குகுத்மி. அவனது மகள் ரேவதி. மன்னன் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க பெரும் பிரயத்தனம் மேற்கொண்டும் வரன் எதுவும் சரியாக அமையவில்லை. எனவே, நேரில் பிரம்மாவைக் கண்டு தன் பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்ட வரனை அறிந்து கொண்டு மணம் முடிக்க எண்ணி பெண் ரேவதியையும் அழைத்துக் கொண்டு பிரம்மாவின் சத்தியலோகம் அடைந்தான். பிரம்மா தன் சபையில் வீற்றிருந்து தம்பூரா, வீணையுடன் கந்தர்வர்கள் பாடிக் கொண்டிருக்க அந்தச் சங்கீதத்தில் மூழ்கி அனுபவித்துக் கொண்டிருந்தார். மன்னன் குகுத்மி தன் மகள் ரேவதியுடன் காத்திருந்தான். சங்கீதம் முடிந்து சபை கலையும் போது தான் குகுத்மியைக் கண்ட பிரம்மா அவர்கள் அங்கு வந்த காரணத்தைக் கேட்க, மன்னன் வந்த காரணத்தைக் கூறித் தன் மகளுக்கு ஏற்ற மணமகன் யார்? என்று வினவ பிரம்மா, பூலோகத்தில் ஆதிசேஷன், பலராமன் என்ற பெயரில் பிறந்துள்ளான். அவனுக்கு உன் பெண்ணைக் கொடுத்துத் திருமணம் செய்து வை என்றார்.

அதுகேட்டு மகிழ்ச்சியுற்ற மன்னன் குசஸ்தலீ நகரம் திரும்பினான். இதற்குள் பல யுகங்கள் கழிந்திட ஊர் மிகவும் மாறி இருந்தது. மக்கள் எல்லாம் குள்ளமாகக் காணப்பட்டனர். ஆனால் மன்னனும், அவன் மகளும் சிறிதும் மாற்றமில்லாதிருந்தனர். பிரம்மலோகத்தில் உள்ளவர்களுக்கு முதுமையோ, மரணமோ ஏற்படுவதில்லை என்பதை ஏற்கனவே அறிந்திருந்த அவன் பல யுகங்கள் கழிந்ததையும் உணர்ந்தான். பிறகு மன்னன் குகுத்மி, தன் மகள் ரேவதியுடன் துவாரகையை அடைந்து கிருஷ்ண பலராமர்களைச் சந்தித்து வந்த காரணத்தை விளம்பினான். பிரம்ம நிர்ணயப்படி பலராமனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினான். ரேவதி முன் பலராமன் உருவில் சிறியவனாகக் காணப்பட கிருஷ்ணன் அறிவுரைப்படி பலராமன் ரேவதியைத் தனக்கு சரிசமானமுள்ளவளாக தன் கலப்பையைக் கொண்டு மாற்றிவிட இருவர் திருமணமும் நடத்தி விட்டு குகுத்மி தவம் செய்ய கானம் சென்றான்.

9. சோமன் வரலாறு

அத்திரிமா முனிவர் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்து வர அவர் உடல் சோமரசமயம் ஆயிற்று. அவர் கண்களிலிருந்து சோமரசம் சிந்த ஆரம்பித்தது. அதைக் கண்ட பிரம்மதேவர் தேவதா ஸ்திரீகளை அழைத்து அந்த சோமரசத்தை அருந்தி கருவுறுமாறு கூறிட, அவர்களும் அவ்வாறே செய்து கருவுற்றனர். ஆனால், அதன் கனம் தாங்காமல் அவற்றை அவர்கள் கீழே நழுவவிட அவை கீழே விழுந்து உடனே ஒன்றாக இணைய சந்திரன் (சோமன்) உருவானான். பிரம்மா உடனே சந்திரனைக் கீழே விடாமல் தேரில் வைத்துக் கொண்டு செல்ல பிரம்மாவின் மானச புத்திரர்கள் வேத மந்திரங்களால் துதி செய்தனர். பிரம்மாவுடன், சந்திரன் அத்தேரிலிருந்து பூமண்டலத்தை இருபத்தோரு முறை சுற்றிவர ஓஷதிகள், வனஸ்பதிகள் (தாவரங்கள்) தோன்றி வளர்ந்தன. சந்திரன் தவம் செய்து தன் சக்தியை வளர்த்துக் கொண்டான். பிரம்மா சந்திரனை ஓஷத சாம்ராஜ்ஜியத்திற்குப் பட்டாபிஷேகம் செய்வித்தார்.

தக்ஷன் நட்சத்திரங்களான இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கு விவாகம் செய்து வைத்தான். சந்திரன் அரசாட்சி பெற்ற மமதையுடன் ஆங்கீரசர் ஆகிய முனிவர்களை எதிர்த்து பிரகஸ்பதியின் மனைவியாகிய தாராவை அபகரித்துச் சென்றான். ரிஷிகள், தேவர்கள் அவன் செய்வது அக்கிரமம் என்றும், தாரையை விட்டு விடுமாறும் அறிவுரை கூறினர். ஆனால், அவன் கேட்கவில்லை. அவனுக்கு உதவியாகச் சுக்கிராச்சாரியார் வர தேவாசுரப்போர் நடந்தது. இந்நிலையில் தேவர்கள் பிரம்மாவை நாடிப் போரை நிறுத்த வேண்டினர். பிரம்மாவும் தலையிட்டு போரை நிறுத்தி தாரையைத் தானே பெற்று பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார். ஆனால், கருவுற்றிருந்த அவளை ஏற்க மறுத்தார் பிரகஸ்பதி. அக்கருவை விட்டு விட்டு வருமாறு கூறினார். அவள் அக்கருவை ஒரு மரத்தடியில் விட்டு விட்டாள். அக்கரு உடனே ஒரு சிறுவனாக மாறிட அதன் ஒளி, அழகு கண்டு தேவர்கள் வியப்புற்றனர். பின்னார் அக்குழந்தை சந்திரனுடையதே என்று தாரை கூறினாள். அக்குழந்தைக்குச் சந்திரன், புதனெனப் பெயரிட்டான்.

10. வாரணாசி

ஒரு சமயம் திவோதாசன் என்பவன் காசியை ஆண்டு வந்தான். பார்வதி, பரிணயம் முடித்துக் கொண்டு புதுத்தம்பதிகள் இமவான் வீட்டில் இருந்தனர். அப்போது ஒருநாள் பார்வதியின் தாயார் மேனை, தன் மாப்பிள்ளையைப் பற்றித் தரக்குறைவாகப் பார்வதியிடம் பேசினாள். உன் கணவன் ஆசாரமற்றவன், மயானப் பொடி, கபாலங்களுடன் வீட்டின் தூய்மையைக் கெடுக்கிறான். கணங்களை வீட்டில் சேர்க்கிறான். இப்படிப்பட்ட ஒருவனை நான் எங்கும் பார்த்ததில்லை என்றாள். இதனால் மனவருத்தம் கொண்ட பார்வதி, பரமனிடம் நான் இனி இங்கு இருக்கமாட்டேன். நம் வீட்டுக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினாள். அப்போது பரமன் கங்கைக் கரையில் திவோதாசன் ஆட்சி செய்து வரும் வாரணாசியில் குடிபுக எண்ணி, நிகும்பன் என்னும் கணநாயகனிடம் வாரணாசியில் ஜனக்கூட்டம் நிறைந்துள்ளது. எப்படியாவது மிருதுவான முறையில், மன்னனுக்குக் கோபம் வராதவாறு அதனைக் காலி செய்யவும் என்றார். நிகும்பன் காசிக்குப் போய் ஒரு சிற்பியின் கனவில் தோன்றித் தன்னைப் போல் ஒரு விக்கிரகம் செய்து புறநகர்ப் பகுதியில் பிரதிஷ்டை செய்க. அவ்வாறு செய்யின் உனக்கு சர்வமங்களம் உண்டாகுமென்று சிற்பி மங்கணனிடம் கூறினான்.

சிற்பியும் அவ்வாறே விக்கிரகம் செய்து, ஆலயம் நிர்மித்து, விக்கிரகப் பிரதிஷ்டை செய்து தினமும் தூபதீப நைவேத்தியங்களுடன் பூசை நடத்திவர, அந்தக் கோயிலைப் பற்றிய செய்தி மன்னன் காதுக்கெட்டியது. மன்னன் திவோதாசனுக்கு புத்திரப் பேறு இல்லை. எனவே அவன் ராணியை அந்த ஆலயத்திற்குச் சென்று பூஜை செய்து புத்திரபாக்கியம் பெற்று வருமாறு அறிவுரை கூறி அனுப்ப, மகாராணி நிகும்பனுக்குப் பூசை செய்து வந்தாள். நெடுநாட்கள் பூசைக்குப் பிறகும் பலன் ஏதும் ஏற்படாததால் கோபம் கொண்ட மன்னன் அந்தக் கோயிலை இடிக்க ஆட்களை ஏவினான். அவர்களும் அவ்வாறே செய்தனர். அப்போது நிகும்பன் மன்னனிடம் சென்று ஏன் கோயிலை இடித்தாய்? என்று கேட்க மன்னன், கேட்டவர்களுக்கு வரம் கொடுத்த போதிலும் ராணி செய்த பூஜை செய்தும் பலன் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட கோயில் எதற்கு? வீணல்லவா? என்று கூறினான். அதற்கு நிகும்பன் தெய்வ ஆராதனை மட்டுமே பலன் தராது. முன் ஜன்ம புண்ணியமும் இருக்க வேண்டும். இதை எண்ணிப்பாராமல் கோயிலை இடித்து விட்டாய். இது மகா பாவம். இதன் பலனாய் உன் நகரம் திடீரென்று சர்வநாசமாகும் என்று சபித்தான். இதனால் மக்கள் ஊரை விட்டுச் சென்று விட்டனர். மன்னன் திவோதாசனும் நல்ல காலம் ஏற்பட தவம் செய்யச் சென்றான்.

இவ்வாறு வாரணாசி காலியான செய்தியை நிகும்பன் பரமனுக்கு அறிவிக்க, அந்நகரைத் தான் வசிப்பதற்கேற்ப புனர் நிர்மாணம் செய்யுமாறு கூற, சொர்க்கம் போல் அந்நகர் உருவாயிற்று. பார்வதி, பரமேசுவரர்கள் அந்நகரை அடைந்து ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர். சிலகாலம் கழித்து பார்வதி வேறு இடம் செல்லலாம் என்று பரமனிடம் கூற அவர் இதுதான் என் வீடு. நான் இங்கேயே இருப்பேன். உனக்கு விருப்பமில்லாவிடில் நீ இஷ்டப்பட்ட இடத்திற்குச் செல்லலாம் என்று கூற, பரமன் கோபம் கொண்டுள்ளது அறிந்து பார்வதி மவுனமாயினாள். அச்சமயம் முதல் அந்த நகரம் விடப்படாத நகரம் என்ற பொருளுடைய அவிமுக்த நகரம் எனப்பட்டது. இந்த நிகழ்ச்சி சுவாயம்பு மன்வந்தரத்தில், ஒரு யுகத்தில் நடந்தது. அப்போது தனியுகம் வர அந்நகரம் மறைந்தது. திவோதாசன் இதுவரையில் தவம் செய்து கொண்டிருந்தான். அந்த நகரைப் பத்திரசிரேண்வன் என்பவன் கைப்பற்றி, நகரை நிர்மாணித்து ஆண்டு வந்தான். இத்தருணத்துக்காகவே காத்திருந்த மன்னன் திவோதாசன் ஒரு சிறு படையுடனும், தன் தவவலிமையுடனும் பத்திரசிரேண்வனைத் தோற்கடித்து காசிநகரைக் கைப்பற்றினான். பின்னர் அவனுக்குப் புத்திர பாக்கியமும் ஏற்பட்டது.

11. ரஜி இந்திரனாதல்

திவோதாசன் குலத்தோன்றல் அலர்க்கன் காலத்தில் வாரணாசி ராஜ்யம் மிக்க சீரும் சிறப்புடனும் சிறந்து விளங்கியது. அவனுடைய மகன் ரஜி என்ற பெயருடையோன் தந்தையைப் போலவே பராக்கிரமம் உடையவனாக நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு ஐந்நூறு புதல்வர்கள். அவர்களும் பராக்கிரமம் மிக்கவர்களாயிருந்ததால் ரஜி மன்னனுக்கு பகைவர் யாருமில்லை. இந்நிலையில் தேவாசுரப் போர் மூண்டிட அவர்கள் பிரம்மாவிடம் சென்று யாருக்கு வெற்றி கிட்டும் என்று கேட்க, அவர் ரஜி மன்னன் இருக்கும் பக்கத்தில் வெற்றி கிடைக்கும் என்று கூறி, தேவர்களும் அசுரர்களும் ரஜி மன்னனைத் தம் பக்கம் ஈர்க்க முனைந்தனர். உதவி கேட்ட தேவர்களிடம் ரஜி, வெற்றி பெற்றால் தனக்கு இந்திர பதவி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் போர் செய்து தேவர்கள் வெற்றிபெற அடிகோலிட, வாக்களித்தபடி ரஜியைத் தேவர்கள் இந்திரனாக்கினர். அப்போது இந்திரன், மன்னன் ரஜியிடம் நீ திரிலோகாதிபதியான இந்திரன். நான் உனக்கு மகனாக இருக்க அருள்புரிக என்றான். மன்னனும் அவன் கூற்றை ஏற்றான்.

தக்க சமயத்தில் ரஜியின் குமாரர்கள் சொர்க்கம் அடைந்து ரஜியை பொம்மையாக்கி அவர்களே சொர்க்கத்தைக் கைப்பற்றி அனுபவிக்கலாயினர். இந்தச் சிக்கலைத் தீர்க்க வழி தெரியாத தேவேந்திரன் குலகுரு பிரகஸ்பதியை வணங்கி தனக்கு உதவுமாறு வேண்டினான். தனக்கு அவிர்ப்பாகம் கிடைக்காததால் உணவின்றி வருந்துவதாகவும் கூறி கவலைப்பட்டான். அப்போது பிரகஸ்பதி, இந்திரன் தனது ராச்சியம், வைபவம், யாகப்பங்கு கிடைப்பதற்கு முயற்சி செய்வதாகக் கூறி, அரசகுமாரர்களுக்கு புத்தி பேதலிக்குமாறு அபிசார ஹோமம் செய்தார். அதனால் அவர்கள் மனம் பேதலித்து ஒளியையும், வீரத்தையும் இழந்தனர். அவர்கள் தேவ, பிராம்மணத் துவேஷிகளாகி அதர்மங்கள் செய்து திரியலாயினர். அந்நிலையைப் பயன்படுத்தி இந்திரன் தேவர்களுடன் கூடி மன்னன் ரஜியையும், அவனது புத்திரர்களையும் கொன்று தன் அரசைத் திரும்பவும் பெற்றுப் பரிபாலனம் செய்யத் தொடங்கினான். உள்ளதைக் கொண்டு திருப்தி அடைபவர்கள் சுகம் பெறுவர். அப்படி இல்லை என்றால் மன்னன் ரஜிக்கும், அவனது குமாரர்களுக்கும் நேர்ந்த கதிதான் ஏற்படும் என்று உணர வேண்டும்.

12. துண்டு மாறனும், உதங்க முனிவரும்

மன்னன் விருஹத்வஷன் சூரியவம்சத்தோன்றல். அவனுக்கு இருபத்தோர் ஆயிரம் மக்கள். மூத்த மகன் பெயர் குவலஷ்வன். மன்னன் மூத்த மகனிடம் அரசை ஒப்புவித்துத் தவம் இயற்றக் கானகம் செல்ல எண்ணினான். ஆனால் மகனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வரும் போது மன்னனைக் காண உதங்கர் வந்தார். அவர் கடற்கரையில் தன் ஆசிரமம் இருப்பதாகவும், அங்கு துண்டு என்ற அரக்கனால் தொல்லைகள் அதிகம் உள்ளதாகவும் அவனை அழிக்குமாறும் வேண்டினார். தான் தன் ஆயுதங்களை எல்லாம் ஒப்படைத்து விட்டதால், தன் மகன் குவலஷ்வனை அழைத்துச் செல்லுமாறும், அவன் அரக்கனைக் கொல்வான் என்றும் கூறினான் மன்னன். குவலஷ்வன் சகோதரர்களுடன் உதங்கர் பின் சென்று மணலைத் தோண்ட கோபம் கொண்டான் அரக்கன். துண்டுவின் படைக்கும் குவலஷ்வன் மற்றும் சகோதரர்களுக்கும் போர் நடந்தது. சகோதரர்களில் மூவர் மட்டுமே மிஞ்சினர். இறுதியில் குவலஷ்வன் அரக்கன் துண்டுவைக் கொன்று, துண்டுமாறன் என்ற பெயர் பெற்றான். உதங்கர் அவனை ஆசிர்வதித்தார். (திரிசங்கு மன்னன் சகரன்-பிரமபுராணம் காண்க.)

13. கயாசுரனின் சரிதம்

பிரம்மா படைத்த தாமச குண அரக்கர்களில் கயாசுரனும் ஒருவன். அவன் அரக்கனாயினும் அரி பக்தன். அவன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்ய, தவாக்கினி எங்கும் பரவ, அதைச் சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட, அவர்கள் பின்னர் சிவனிடம் செல்ல, அவர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். ஸ்ரீவிஷ்ணு அவர்களை எல்லாம் கயாசுரன் இருக்குமிடம் செல்லுமாறு கூறி, தானும் கருடன் மீதேறி புறப்பட்டுச் சென்றார். கயாசுரனை அடைந்தவுடன் அவர்கள் அவன் ஏன் கோர தவம் செய்கிறான் என்று கேட்டு, வேண்டிய வரம் கேள் தருகிறோம் என்றனர். அவன் கண் திறந்து பார்த்து எல்லோரையும் வணங்கினான். பின்னர் அவர்கள் அனைவரையும் தரிசிக்கும் பேறு பெற்றதால் தான் உலகில் எல்லாவற்றிலும் மிகச்சிறந்த பவித்திரமுடையவனாகுமாறு வரம் வேண்டினான். அப்படியே தந்தோம் வரம் என்றனர் அனைவரும். அதுமுதல் அவனைக் கண்டவர், தொட்டவர் என்று அனைவரும் புண்ணியாத்துமாக்களாகிச் சொர்க்கம் சென்றனர். இதனால் யமபுரி சூனியமாயிற்று. அதனால் யமன் பிரமனிடம் முறையிட, அவர் அவனை அழைத்துக் கொண்டு விஷ்ணுவிடம் செல்ல, அவர் அவர்களிடம் ஒரு சிறந்த யாகம் செய்ய முற்படுங்கள்; அதற்குக் கயாசுரனின் பவித்திர உடலை இடமாகக் கொண்டு செய்ய வேண்டி அவனிடம் கூறி அனுமதி பெறுங்கள். அவன் உடல் பவித்திரமானது விசாலமானது. எனவே அதனை யாக மேடையாக்கி யாகம் தொடங்குவதற்காக அனுமதி பெற்று விடுங்கள். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

பிரம்மாதி தேவர்கள் கயாசுரனிடம் சென்றனர். பிரம்மாதி தேவர்களுக்கு அசுரன் வணக்கம் செலுத்தினான். பிரம்மாவை நோக்கி பிதாமகா! நீங்கள் உலகம் அனைத்திற்கும் குரு. நீங்கள் என்ன ஆணையிட்டாலும் அதனைச் சிரம் தாழ்த்தி ஏற்றுச் செய்கிறேன் என்றான். அப்போது பிரம்மா தான் யாகம் செய்யப்போவதாகவும், அதற்காக யாகசாலை, யாகமேடை அமைக்க விசாலமான, புனிதமான அவனது உடலைக் கேட்டார். அதற்கு அசுரன், என் உடல் யஜ்த்துக்கு பயன்படும் என்றால் நான் தன்யன் ஆனேன். எனது முன்னோர்கள் புனிதமாவர். இந்த உடல் தங்களாலேயே தோற்றுவிக்கப்பட்டது. இன்று புனிதமாகி உள்ளது. நீங்கள் செய்யும் யாகம் உலக நன்மைக்கானது. இதற்கு உடல் பயன்படுவதால் என் ஜன்மம் சாபல்யம் பெற்றது என்றான். உடனே அவன் மல்லாந்து படுத்துக் கொள்ள, பிரம்மா, வசிஷ்டர், காசியர் ஆகிய ரிஷிகளுடன் யாகத்தை ஆரம்பித்தார். அக்னி சர்மா என்பவர் பஞ்சாக்கினியை உண்டாக்கினார். ஓமம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அசுரன் உடல் அசைந்தது. பிரம்மா யமனிடம் அவனிடமுள்ள ஒரு சிலையைக் கொண்டு வந்து கயாசுரன் தலைமீது வைக்கச் சொன்னார். சிலை வைத்த பின்னும் அவன் அசைந்து கொண்டே இருந்தான். ருத்திராதி தேவர்களை அவன் கால்மீது நிற்கும்படி கூறினான். மறுபடியும் அசைவு நிற்காததால் விஷ்ணுவிடம் சென்று கூறினர்.

அப்போது விஷ்ணு தன் போல் உருவை உண்டாக்கி அதனைச் சிலையுடன் தலைமீது வைக்குமாறு பணித்தார். இதனால் விஷ்ணுவே சிலையில் சேர்ந்து அமர்ந்ததாகியது. அசைவு நின்றது. அப்போது அவன் அனைவரிடமும் என்னை ஏன் இவ்வாறு துன்புறுத்துகிறீர்கள்? விஷ்ணு அசைய வேண்டாம் என்று கூறியிருந்தால் போதுமே. எனினும், தேவர்கள் அனைவரும் என் மீது இருந்தனர். சந்தோஷம் எனக்கு. இவ்வாறே எப்போதும் அருள்புரியுங்கள் என்று கூறினான். பின்னர் தேவர்கள் அவனுடைய சுபாவம், பக்தி சிரத்தை ஆகியவற்றைச் சிலாகித்துப் பேசி, வேண்டிய வரத்தைப் பெற்றுக்கொள் என்றனர். பூமி, சூரிய சந்திரர்கள், மும்மூர்த்திகள் உள்ளவரைக்கும் தேவர்கள் இந்தச்சிலையிலேயே இருப்பீர்களாக. இந்த இடம் என் பெயரில் கயா ÷க்ஷத்திரம் என்று புகழ்பெறட்டும். மக்கள் நலனுக்காக இந்த ÷க்ஷத்திரத்தில் சர்வதீர்த்தங்களும் ஏற்படட்டும். இங்கு நீராடி தானம், தர்ப்பணம், பித்ருக்களுக்கான சிரார்த்தம் செய்பவர்களுக்கு விசேஷ பலன் உண்டாகட்டும். செய்பவர்களின் பித்ருக்களுக்கு பிரம்மலோகப் பிராப்தி கிடைக்கும். நைமிசம், புஷ்கரம், கங்கை, பிரயாகை, காசி முதலிய தீர்த்த ÷க்ஷத்திரங்கள் இந்தக் கயாவில் இருக்கட்டும். நீங்கள் அனைவரும் என்னில் இருக்க வேண்டும். இவ்வாறு வரமளித்து எனக்கு அருள்பாலிப்பீர்களாக என்று வரம் வேண்டினான். அவ்வாறே வரங்கள் தந்தனர். பிறகு பிராமணர்களுக்குப் பிரம்மா பொன், போஜனம், பட்சணங்கள், கல்பதரு, காமதேனு ஆகிய இவற்றுடன் வீடு கட்டிக் கொள்ள நிலமும், சுற்றியுள்ள அக்கிரகாரங்களையும் கொடுத்து இனி யாரும் யாரையும் எதற்காகவும் யாசிக்கக்கூடாது என்றார். பின்னர் தம் அம்சத்தைக் கயாவில் இருத்தி மறைந்தார். விஷ்ணு மட்டும் கதாதரன் என்ற பேரிலும் கயாவில் தங்கிவிட்டார்.

ஒரு சமயம் பிராமணர்கள் தர்மதேவன் செய்யும் யாகத்திற்குச் சென்று தக்ஷிணை பெற்றுவர பிரம்மன் கோபித்துக் கல்பதரு, காமதேனு இல்லை. அவர்கள் பார்வை பட்ட நதி உலர்ந்து விடும் என்று சாபம் தர, பிராமணர்கள் மன்னிப்பு கோர அவர்களை, தீர்த்தோப ஜீவர்களாக இருக்குமாறு கூறினார். தீர்த்தோப ஜீவர்கள் என்றால் புண்ணிய தீர்த்தத்திற்கு வரும் யாத்திரிகர்கள் சிரார்த்தம் செய்வித்து, அவர்கள் அளிக்கும் தக்ஷிணை, தானங்களுடன் வாழ்க்கை நடத்துமாறு கூறினார். யாத்திரிகர்கள் உங்களைப் பூசித்தால் என்னைப் பூசித்ததாகும் என்றார்.

14. கயாசுரன் தலை மீது சிலை

சுவேத வராக கல்பத்தில் தர்மமூர்த்தி என்றொரு மகானுபாவன், தன் மனைவி விச்வரூபையுடனும், புத்திரி தர்ம விரதையுடனும் வசித்து வந்தார். தர்மவிரதைக்குத் தகுந்த வரன் கிடைக்காததால் அவளை அதற்காகத் தவம் செய்யுமாறு தர்மமூர்த்தி கூறினார். அவ்வாறே அவள் தவம் செய்து வந்தாள். பிரம்மாவின் மானசபுத்திரரான மரீசி முனிவர் அவள் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு அவள் தவத்திற்கான காரணத்தைக் கேட்டு, தன்னைப் பற்றியும் தெரிவித்துக் கொண்டார். அப்போது அவள் தந்தையிடம் பேசுமாறு கூற தர்மமூர்த்தியைக் காணச் சென்ற மரீசி முனிவரை அவன் நன்கு வரவேற்று உபசரித்து அவர் விருப்பப்படி தன் மகளை அவருக்கு மணம் செய்து வைத்தான். பின்னர் மரீசி தர்மவிரதையை அழைத்துக் கொண்டு தன் ஆசிரமத்தை அடைந்து வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் படுத்துக் கொண்டிருக்க, மனைவி பாதங்களைப் பிடித்து விட நன்கு உறங்கி விட்டார். அவ்வமயம் பிரம்மதேவர் அங்கு வந்தார். அப்போது தர்மவிரதை கணவன் பணிவிடையை நிறுத்தி, பிரம்ம தேவனை வரவேற்று உபசரித்தாள். கண் விழித்த முனிவர் பிரம்மா வந்திருப்பதை அறியாமல் தன் பாதங்களைப் பிடித்து விடுவதை விட்டு வேறு வேலைக்கு மனைவி சென்று விட்டதாகக் கருதி அவளைச் சிலை ஆகுமாறு சபித்தார். அப்போது அவள் கணவனிடம் நடந்ததைக் கூறி, தவறு செய்யாத தனக்கு சாபம் அளித்ததால், பரமேசுவரர் உங்களை சபிக்கட்டும் என்று கூறி தீ மூட்டி அதன் நடுவில் அமர்ந்து தவம் செய்யலானாள். மரீசி முனிவரும் தவநிஷ்டையில் அமர்ந்து விட்டார்.

இவர்களுடைய தபாக்கினி வெப்பத்தைத் தாளாத தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அப்போது விஷ்ணு தர்மவிரதை முன்தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க அவள் மரீசியின் சாபத்தை அகற்றுமாறு வேண்டினாள். அப்போது பகவான் சக்திமானாகிய மரீசியின் சாபத்தை மாற்ற முடியாது. வேறு ஏதேனும் வரம் கேள் என்றார். அவள் சாபத்தை மாற்ற முடியாதென்றால் நான் சிலையாகிறேன். நான் புனிதமானவள் ஆக வேண்டும். கங்கை போன்ற தீர்த்தங்களை விட புனிதமாக இருக்க வேண்டும். ரிஷிகள், தேவர்கள், கடவுளர்கள் என்னில் இருக்க வேண்டும். இந்த சிலை தீர்த்தத்தில் நீராடி செய்யப்படும் தர்ப்பணம், சிரார்த்தம் பெரும்பலனை அளிக்க வேண்டும். என்னருகில் தவம் செய்வோர் சித்தி பெற வேண்டும் என்று வேண்டினாள். அப்போது விஷ்ணு உன் வரம் அத்தனையும் சித்தியாகும். கயாசுரன் தலை மீது நீ நிலையாக இருப்பாய். நாங்கள் எங்கள் அம்சத்துடன் உன்னுள் இருப்போம் என்று வரம் அளித்தார். கயையில் அந்த சிலையின் மீதே பிண்ட பிரதானங்கள் செய்வர்.

கயாயாம் ஸ்ரீ விஷ்ணு பாதாதி
ஸமஸ்த தீர்த்தேஷு தத்தம்

என்பர். இதுவே கயாசுரன் தலை மீது வைக்கப்பட்ட சிலையின் வரலாறு. இந்தச் சிலை பிரம்மாவின் ஆணைப்படி யம தர்மனிடம் இருந்தது.

15. விஷ்ணு, கயாவில் கதாததர் ஆனார்

முன்னம் கதுடன் என்ற ஓர் அரக்கன் இருந்தான். அவனால் போரில் தொல்லைகள் அனுபவித்த தேவர்கள் பிரம்மாவுடன் விஷ்ணுவைத் தரிசித்து அசுரர்களை அழிக்குமாறு வேண்டிட, அவர் தக்கதோர் ஆயுதம் கிடைத்தால் அதன் மூலம் வெற்றி காண முடியும் என்றார். கதுடன் வஜ்ரகாயம் கொண்டவன். மேலும் கயாசுரன் போல் தர்மபுத்தி உடையவன். அவனிடம் பிரம்மா சென்று கடின தேகம் கொண்ட உனது எலும்பிலிருந்து ஒரு கதாயுதம் செய்து விஷ்ணுவுக்கு பரிசளிக்க விரும்புகிறோம். எனவே உன் உடலைத் தானம் செய் என்று கேட்க, விஷ்ணுவின் கையில் நிலையாக இருப்பது மகாபாக்கியம் என்று கூறி யோக சக்தியால் தன் உடலை விட்டுவிட, பிரம்மா விசுவகர்மாவைக் கொண்டு ஒரு கதாயுதம் உருவாக்கிட, அதை விஷ்ணுவுக்கு ஓர் ஆயுதமாக அளித்தார். அந்த கதாயுதத்தைக் கொண்டு விஷ்ணு அசுரர்களை அழித்து தேவர்களுக்கு வெற்றி தேடித் தந்தார். அந்தக் கதையுடன் விஷ்ணு அம்சமும் கயாசுரன் தலைமீது அமர அவனுடல் அசைவு நின்றது. இவ்வாறு கயாவில் விஷ்ணு கதாதரனாகக் காட்சி அளிக்கிறார்.

16. கயா ÷க்ஷத்திர மகிமை

முன்னொரு காலத்தில் தருமவானாகிய ஒரு வைசியன் இருந்தான். அவன் வியாபாரத்தை முன்னிட்டு வேறொரு ஊருக்குச் செல்கையில் வழியில் ஒரு சிறிய காடு வந்தது. அதில் போய்க் கொண்டிருக்கும்போது ஒரு மரத்திலிருந்து ஒரு பூதம் தோன்றி அவன் வழியை மறித்தது. அச்சமற்ற அந்த வைசியன் அதை நோக்கி நீ யார்? ஏன் வழி மறைத்து நிற்கிறாய்? என்று கேட்க, அது தானும் ஒரு மனிதன் தான் என்றும், தனக்குப் புத்திரசந்தானம் இல்லாததால், யாரும் சரியான முறையில் உத்தர கிரியைகள் செய்யாததால் இந்தப் பிரேதரூபம் மாறவில்லை. என்னிடம் நிறைய செல்வம் உள்ளது. அதை எடுத்துக் கொண்டு என்னுடைய பெயர், கோத்திரம் சொல்லிக் கயா ÷க்ஷத்திரத்தில் பிண்டப் பிரதானம் நீ செய்வாயாக என்று கூறி, நீ செய்வாய் என்று தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் கூறிற்று. அந்த வைசியனும் கயைக்குச் சென்று பிரேதம் வேண்டிக் கொண்டவாறே பிண்டப் பிரதானம் செய்து அவர்களும் உத்தம கதி அடையச் செய்து வீடு திரும்பினான். அனாதை பிரேதம் கூட கயா சிரார்த்தத்தால் முக்தி அடையும் என்பதை இதன் மூலம் அறியலாம். கயா ÷க்ஷத்திரம் இத்தனை சிறந்த மகிமை கொண்டது.

அஷ்டா தச புராணமெனும் பதினெண் புராணங்கள்-உபவாயு புராணத்துடன் சம்பூரணம்!

படித்தவர், கேட்டவர் அனைவரும் எல்லா பாவங்களினின்றும் விடுபட்டு மோட்ச முக்திக்கு பாத்திரராவார்களாகுக!

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar