வேதகிரீஸ்வரர் கோவில் சுவர் தொடர் மழையால் சரிந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2021 03:01
ரிஷிவந்தியம்; மேலப்பழங்கூர் வேதகிரீஸ்வரர் கோவில் சுற்று சுவற்றின் ஒரு பகுதி மழையால் சரிந்தது.ரிஷிவந்தியம் அடுத்த மேலப்பழங்கூர் கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கருங்கற்கலால் கட்டப்பட்ட வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வேதகிரீஸ்வரர் மூலவராக லிங்க வடிவத்திலும், பார்வதி, விநாயகர், முருகன், மும்மூர்த்தி, சூரியபகவான், சந்திர பகவான், நந்தீஸ்வரர், ஆண்டி கொளத்தி முருகன் உள்ளிட்ட சுவாமிகள் உள்ளன.
இங்கு திருமணம் செய்யும் அனைவருக்கும் புத்திரபாக்கியம் கிடைக்கும் என கூறுவதால், முகூர்த்த நாட்களில் அதிகளவு திருமணங்கள் நடைபெறும்.கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த தகராறினால் கோவில் முறையான பராமரிப்பின்றி வீணாகியது. இதனால் கோவில் கோபுரங்கள் சேதமடைந்தும், சிலைகள் உடைந்த நிலையிலும் உள்ளது. கோவில் சுற்று சுவரில் செடிகள் வளர்ந்து தற்போது மரங்களாக உள்ளது. கடந்த சில வருடங்களாக அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, கோவிலை சுத்தம் செய்து பூஜைகள் செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் பலத்த மழையினால் கோவில் வலது பக்க சுற்று சுவரின் ஒரு பகுதி சரிந்தது. சுற்று சுவற்றில் வளர்ந்திருந்த மரத்தின் வேர் பரவியதால், சுவர் வலுவிழுந்து விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று காலை விழுந்தது.