மயிலாடுதுறை: சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாயில்(திருமுல்லைவாசல்) கடற்கரையோரம் சம்பந்தர் அவதரித்த சீர்காழிக்கு அருகிலே சம்பந்தரால் பாடல்பெற்ற திருத்தலம்.களிமண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கு மதுவில் தெளிமண்டியுண்டு சிறை வண்டு பாடு திருமுல்லை வாயிலிதுவே என்று ஊரின் அழகை சம்பந்தர் வர்ணிக்கின்றார்.அங்கே சுனாமி நகர் என்ற ஆரியநாட்டு தெரு அமைந்துள்ளது. சுமார் 200 மீனவ குடும்பங்கள் வாழும் பகுதி.மீனவர் என்றவுடன் சைவப் பெரியோர் நினைவு கூறுவது அதிபத்த நாயனார்.தான் நின்ற கொள்கையில் வறுமை வந்த போதும் விடாது பெருமான் திருவடி பற்றி தாம் பிறந்த மீனவ சமுதாயைத்தை உலகறிய செய்தவர்.
மீன்களை தந்து பக்தியை நிலை நிறுத்திய பெரியவர். ஒவ்வொரு குடியிலும் பிறப்பெடுத்து அக்குடியின் பெருமையை நிலை நாட்டியவர்கள் நாயன்மர்கள். உயர் குடி, கீழ் குடி என்ற வாக்கை வழுவிழக்கச் செய்தவர்கள். கடந்த சுனாமியால் சிக்குண்ட இக்கிராமத்திற்கு தருமை ஆதினம் சார்பில் அப்போது அரசிற்கு சுமார் 35 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு சுனாமி குடியிருப்பு கட்டப்பட்டது. இன்று வரை சுனாமி நகர் என்று சுனாமி நினைவை நாளும் சுமந்து வந்த அம்மக்களுக்கு அருள்செய்து அவர்களை பெருமையடைய செய்த மறைநாவர் தருமை நட்சத்திர குருமணிகள். கடந்த நவம்பர் 27 இல் எழுந்தருளும் வேளையில் அவ்வூர் மக்களின் அன்பையும் பண்பையும் கண்டு வியந்து அவர்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று விழைந்தார்கள். பழுத்த தமிழப்புலமை வாய்த்த பெரியோர் சிந்தைக்கு அதிபத்தர் நினைவுக்கு அவ்வூர் மக்களை அதிபத்தரின் அடியவர் ஆக்கினார்கள்.ஆம் குலத்தொழிலே உயிர் மூச்சாய் இருந்தவர்களுக்கு அதிபத்த நாயனாரின் அருள்வரலாற்றை கூறியதும் நெகிழ்ந்து போனார்கள். குருமணிகள் நகரின் பெயரை " ஸ்ரீ அதிபத்த நாயனார் நகர்" என்று மாற்றி வைத்தால் நீங்கள் மென்மேலும் வளர்வீர்கள் என்று கூற சிவமே கூறியது போல் மறுமொழி ஏதும் கூறாது இசைந்தனர் அப்பெரியோர்கள்.
அதன் படி இன்று 08.01.2021 மாலை குருமூர்த்திகள் அங்கேய எழுந்தருளி நாயன்மர் பெயரை தாங்கும் நகரை திறந்து வைத்து பொன்மொழி கொண்டு அவர்களை வாழ்த்தி ஆசி செய்தார்கள். நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை என்று குருமணிகளின் வாக்கிற்கு இணங்க மழையும் பொழிந்து அவர்களை ஆசீர்வித்தது. கடல் அன்னை சிறப்பைக்கூறி கிடைக்கும் செல்வத்தில் கோயித்திருபணிகள் செய்து அருள்கொழிக்க செய்தல் வேண்டும் அன்று அறிவுறுத்தினார்கள். குருமணிகளின் அருள் மழையில் நனைந்த மக்கள் மழை பெய்ய துவங்கியதும் நனைந்தனர்.எல்லாரும் ஓரினம் என்பதை நன்கறிந்த அன்பு செய்யும் குருமணிகள் அவர்களை மேடைக்கு அழைத்து அருகிலே அமர்த்தி அன்பு செய்தார்கள்.
"அதிபத்த நாயனார் " திருமேனி நால்வர் திருமேனியுடன் அமைக்கப்படும் எனவும், ஆண்டு தோறும் குருபூஜை விழா திருமுல்லைவாயில் மீனவ சமுதாய மக்கள் ஏற்று நடத்த வேண்டும். எனவும் தருமை குரு மணிகள் கருணையுடன் அருளி உள்ளார்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த மக்கள் இன்று குருமணிகள் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றதாக குருமணிகளே கூறினார்கள். அதன்பின் மீனவஇளைஞர்களின் மாநில அளவிலான கைப்பந்து போட்டியை துவக்கி வைத்தும் மீனவச்சமுதாய சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் நகர் பலகை திறந்துவைத்தும் ஆசிவழங்கினார்கள்.