பதிவு செய்த நாள்
12
ஜன
2021
07:01
பூமியில் 11 ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த ராமர் தன் அவதாரம் முடிந்து விண்ணுலகம் கிளம்பினார். அப்போது அயோத்திவாசி அனைவரும் அவருடன் வைகுண்டம் புறப்பட தயாராயினர். ஆனால் அனுமன் மட்டும் அதை விரும்பவில்லை. “சுவாமி! வைகுண்டத்தில் நாராயண நாமம் வேண்டுமானால் கேட்கும். ஆனால் பூலோகத்தில் இருந்தால் ராம நாமம் ஜபிக்கலாம். எனவே எனக்கு வைகுண்டம் வேண்டாம். பூலோகத்தில் இருந்து ராம நாமத்தை ஜபித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறேன் என்றார். அனுமனை வழிபடும் போது வெறுமனே ஆஞ்சநேயா என அழைக்காமல் ராம தாச ஆஞ்சநேயா என்று அழைத்தால் மகிழ்வார் என்கிறார்கள் மகான்கள்.
அனுமனுக்கு பிடித்த அவல்: தமிழகத்தில் அனுமனுக்கு வடை மாலை, வெண்ணெய் சாத்துவது வழக்கம். கேரள மாநிலம் தலைச்சேரி அருகில் உள்ள திருவெண்காடு கிராமத்திலுள்ள ராமசாமி கோயிலில் அனுமனுக்கு அவல் நைவேத்யம் செய்யப்படுகிறது. இங்கு ராமருக்கு எதிரில் அனுமன் வணங்கியபடி காட்சி தருகிறார்.
ஐந்து முக ஆஞ்சநேயர்: சஞ்சீவி மலையை ஒரு கையிலும், இன்னொரு கையில் கதாயுதத்தையும் தாங்கியபடி காட்சி தரும் அனுமனை, ஆந்திர மாநிலம் செகந்திராபாத் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள கோயிலில் தரிசிக்கலாம். பத்து கைகளுடன் காட்சி தரும் இவர், வராகர், கருடர், ஆஞ்சநேயர், நரசிம்மர், ஹயக்ரீவர் ஆகிய ஐந்து முகங்களுடன் பஞ்சமுக ஆஞ்சநேயர் எனப்படுகிறார்.
1500 படி ஏறி தரிசனம்: சோளிங்கர் அருகில் உள்ள இரட்டை மலை யோக நரசிம்மசுவாமி கோயிலில் யோக ஆஞ்சநேயர் இருக்கிறார். இவரை தரிசிக்க மலையில் 1500 படிகள் ஏற வேண்டும். இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி 12 நாட்கள் இவரைத் தொடர்ந்து தரிசித்தால் நினைத்தது நிறைவேறும்.
நல்லதே நடக்கும்: ராவணனையும், சுக்ரீவனையும் ஒரு தராசில் வைத்து ஒப்பிடுகிறார் துளசிதாசர். ராவணனுக்கு நல்ல மனைவி, சொல் கேட்கும் பிள்ளை, செல்வம், உடல் வலிமை, சகோதரர்கள் என எல்லாம் இருந்தும் பயனில்லை. அவர்களின் சொல்லை அவன் மதிக்கவில்லை. தவறு செய்யும் நேரத்தில் புத்தி சொல்லி திருத்தும் நல்லவர்களின் நட்பும் அவனுக்கு இல்லை. இதனால் எல்லாம் இருந்தும் அத்தனையும் வீணாய் போனது. சுக்ரீவன் விஷயத்தில் எல்லாமே தலைகீழாக இருந்தது. மனைவி, பிள்ளைகளை பிரிந்து அண்ணன் வாலியால் நாட்டை விட்டே துரத்தப் பட்டான். ஒரே ஒரு நல்லவனான அனுமன் அவனது மந்திரியாக இருந்தான். நல்லவனான அவனது நட்பு, இழந்த அனைத்தையும் திரும்ப கிடைக்கச் செய்தது. இதனால் அனுமன் மீது பக்தி கொண்டால் நம் வாழ்வில் நல்லதே நடக்கும் என்கிறார் துளசிதாசர்.
வீரத்துறவியின் வேண்டுகோள்: மகாவீர அனுமனை உன் வாழ்வின் லட்சியமாகக் கொள். அவர் ராமபிரானின் உத்தரவுப்படி கடலையும் தாண்டிச் சென்றார். அவருக்கு வாழ்வை பற்றிய கவலை சிறிதும் இல்லை. தன் புலன்களை அடக்கி ஆட்சி செய்தார். புத்தி சாதுர்யம் மிக்க அவர் ஒருபுறம் தொண்டு என்னும் லட்சியத்தின் உருவகமாகத் திகழ்கிறார். இன்னொரு புறம் சிங்கம் போல துணிச்சலுடன் உலகையே பிரமிக்க வைக்கிறார். ராமனின் நன்மைக்காகத் உயிரையும் தியாகம் செய்ய தயக்கம் காட்டவில்லை. ராமசேவையைத் தவிர மற்ற எதையும் சிந்திக்கவில்லை. பிரம்மலோக, சிவலோக பதவியைக் கூட வேண்டாம் என ஒதுக்கினார். அவரது வாழ்வின் ஒரே லட்சியம் ராமனுக்கு நன்மை செய்வது மட்டுமே. அர்ப்பணிப்பு உணர்வுடன் பிறருக்கு சேவை செய்வதே அனுமனிடம் நாம் கற்க வேண்டிய பாடம் என்கிறார் வீரத்துறவி விவேகானந்தர்.