பதிவு செய்த நாள்
11
ஜன
2021
03:01
கோவை: கோவையில் குருகுலம் இன்டர்நேசனல் இன்ஸ்டிடியூட் மற்றும் மணிமகால் சார்பில், மதிநிறை மார்கழி என்ற இசை நாட்டிய விழா, பீளமேடு மணிமகாலில் நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று, திருப்பூர் பகவதி இசைப்பள்ளியை சேர்ந்த சிவசங்கரியின் இசை நிகழ்ச்சியும், பாரதி சுந்தரராஜன், பூரணா சுந்தரராஜன் ஆகியோரின் பரதநாட்டியமும், கரூர் நடனாஞ்சலி நாட்டிய பள்ளி மாணவர்களின் பரதநாட்டியமும், பெரியாழ்வார் திருமகள் நாட்டியமும் நடந்தன.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கோவை அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி பொறுப்பாளர் சரவணன் பேசுகையில், இசையும், நாட்டியமும் இறைவனுக்கு உரிய கலைகள். இது போன்ற புனித நாட்களில், இந்த கலையை பகவானுக்கு சமர்ப்பிக்கும் போது, கடவுளின் பரிபூரண அருள் நமக்கும் கிடைக்கும், என்றார்.டிலைட் இசைக்குழுவின் இயக்குனர் குரு தங்கவேல், மயிலிறகு சுந்தரராஜன், பேராசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.இன்றைய நிகழ்ச்சிமூன்றாம் நாளான இன்று, 5:30 மணிக்கு, கீர்த்தனாவின், தியாகராஜர் ராமாயணம் பரதநாட்டியம், மாலை 6:00 மணிக்கு கோவை சிவாலயா டான்ஸ் அகாடமி மாணவர்களின் பரதநாட்டியம், மாலை 6:30 மணிக்கு சிவாலயா நாட்டிய பள்ளி மாணவர்களின் பரத நாட்டியம், மாலை, 7:00 மணிக்கு, பொள்ளாச்சி பாரதகலா பாடசாலை மாணவர்களின் அர்த்தநாரீஸ்வர் நாட்டிய நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.