பதிவு செய்த நாள்
18
ஜன
2021
10:01
மதுரை : மதுரை சட்ட கல்லுாரி மற்றும் மாகாளிபட்டி கிருதுமால் நதி அருகே 400 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல்லை மதுரை தொல்லியல் ஆய்வு சங்க கோயில் கட்டடக்கலை, சிற்பத் துறை ஆய்வாளர் தேவி, தொல்லியல் ஆய்வாளர் சசிகலா, வரலாற்று ஆய்வாளர் அறிவுச்செல்வம் கண்டுபிடித்தனர்
தேவி கூறியதாவது: ஒரு பலகை கல்லில் ஆண், பெண் உருவம் செதுக்கப்பட்டுள்ளன. அரசனை போல் உள்ள ஆண் சிற்பம் கணுக்கால் வரை மடிப்பு ஆடை உடுத்தி, குறுவாள் சொருகியுள்ளது. இடது கையில் முத்திரை, வலது கையில் மலர் பிடித்து சாந்தமாக உள்ளது. செவிகளில் பத்ரகுண்டலங்கள், கழுத்தில் சரப்பளி, கைகளில் கேயூரம், தோள்வளை, கைவளை அணிகலன்கள் தேய்ந்துள்ளன. தலைவனின் வலது புறம் பெண்மையின் நளினத்துடன் தலைவி சிலை உள்ளது. தலைவனோடு உயிர் நீத்த சதிப்பெண்ணான தலைவி சிற்பமாக மாறி வழிபடலாம். மக்களை காக்க வீர மரணமடைந்த வீரர்களை காவல் தெய்வம் கருப்பசாமிகளாக வழிபடுவது நம் மரபு. பலகை கல்லில் உள்ள தலைவன் சமூக நலனுக்காக உயிர் நீத்த போது தலைவியும் உடன் இறந்ததால் சதிக்கல்லாக மாறி வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது. பெண் தெய்வ வழிபாட்டில் கன்னி, பத்தினி, பழையோள் வழிபாட்டு முறைகளில் பத்தினி வழிபாட்டு வகையை சேர்ந்த சதிக்கற்களை மக்கள் வழிபடுவர்.அந்த வகையில் இந்நடுகல் சதிக்கல்லாகவும் நிற்கிறது. மாகாளிபட்டியில் ஆண் உருவம் செதுக்கிய நடுகல்லையும் மக்கள் வழிபடுகிறார்கள், என்றார்.