பதிவு செய்த நாள்
21
ஜன
2021
05:01
புதுச்சேரி; குருமாம்பட்டு யோகமாயா லலிதாம்பிகை கோவிலில், வரும் 28ம் தேதி ரத உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி குருமாம்பட்டு, ஹவுசிங் போர்டு, இந்திரா நகரில் உள்ள யோகமாயா லலிதாம்பிகை கோவிலில், வரும் 28ம் தேதி காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை, லலிதா ஹோமம், மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, அம்பிகை தேரில் எழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் வலம் வரும் ரத உற்சவம் நடக்கிறது. ஒவ்வொரு அமாவாசை தினத்திலும், இரவு 7:00 மணிக்கு தேர் உற்சவமும், பவுர்ணமி தினத்தில் ஊஞ்சல் உற்சவமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை யோகி லலிதா மகாமேரு டிரஸ்ட் செய்து வருகிறது.
பழநி கோவிலில் அன்னதானம் வழங்க .... உணவு பாதுகாப்புதுறையின் அனுமதி பெறுவது கட்டாயம்!
பழநி தைப்பூச விழா ஜன.22 ல் துவங்கி, ஜன.31 வரை நடக்கிறது. இதையொட்டி ஏராளமானோர் பாதயாத்திரையாக செல்கின்றனர். தொற்று பரவலை தடுக்க ஜன.14 முதல் ஜன.31 வரை பழநி முருகன் கோயிலுக்கு தினமும் ஆன்லைனில் தரிசனத்திற்கு புக்கிங் செய்த 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பலரும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பாதயாத்திரை வருகின்றனர். இவர்கள் பசியாற வழிநெடுகிலும் முகாம் அமைத்து பொதுமக்கள் உட்பட பலரும் அன்னதானம் வழங்குவர்.கொரோனா முன்னெச்சரிக்கையாக அன்னதானம் வழங்க விரும்புவோர் உணவு பாதுகாப்புத் துறையில் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை, பழநி தேவஸ்தான அலுவலகத்தில் ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் நகலுடன் விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்தி அனுமதி பெறலாம். மேலும் உணவு வழங்குவோர் குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும். உணவு வீணாவதை தடுக்க, தேவையான அளவுக்கு மட்டுமே சமைக்க வேண்டும். தரமான பொருட்களால் உணவு தயாரிக்க வேண்டும். செயற்கை நிறமிகள் சுவையூட்டிகள் சேர்க்க கூடாது. அனுமதி பெறாதவர்கள் அன்னதானம் வழங்க முடியாது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.