பதிவு செய்த நாள்
21
ஜன
2021
05:01
சேலம்: தை திருவிழாவையொட்டி, லட்சுமி நரசிம்மர் கோவிலில், மாலோலனுடன் அமிர்தவல்லி தாயார் திருக்கல்யாணம் சிறப்பாக நடத்தப்பட்டது. சேலம், மன்னார்பாளையம் பிரிவில் உள்ள, பழமையான லட்சுமி நரசிம்மர் கோவிலில், வைஷ்ணவ கோவில்களில் நடத்தப்படும், அனைத்து உற்சவங்களும் நடத்தப்பட்டு வருகிறது. தை மாதத்தில் நடத்தப்படும், திருக்கல்யாண உற்சவம் நேற்று நடத்தப்பட்டது. இதற்காக, நரசிம்மரின் உற்சவமூர்த்தியான, மகாலட்சுமியை மார்பில் சுமந்தவன் என பொருள்படும் மாலோலன் மற்றும் அமிர்தவல்லி தாயார் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மணமக்கள் கங்கணம் கட்டி திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. மாப்பிள்ளை, மணப்பெண் சார்பாக பட்டாச்சாரியார்கள் சிறப்பு யாகம் வளர்த்து, மாலை மாற்றும் வைபவம், திருமாங்கல்யம் அணிவித்தல் சடங்குகளை செய்து, பச்ச கோலம் எனும் தேங்காய் உருட்டுதல் உள்ளிட்ட அனைத்து சம்பிரதாயங்களுடன் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள் ராஜூ, நாகராஜ் மற்றும் கட்டளை உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.