ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை இடைவிடாது ஜெபித்த மகனைக் கொல்ல முடிவெடுத்தான் இரண்யன். எங்கேயடா உன் ஹரி? என்று பிரகலாதனிடம் கேட்டான். அவனோ தூணைக் காட்டி, அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார், என்று பதிலளித்தான். அவன் சுட்டிக்காட்டிய தூணைப் பிளந்து கொண்டு நரசிங்கமாய் மகாவிஷ்ணு வெளிப்பட்டார். தன் நீண்ட நகங்களால் இரண்யனைக் கொன்று குடலை மாலையாக்கினார். அவரது ஆவேசம் கண்ட தேவர்கள் அஞ்சி ஓடினர். திருமகள் கூட நரசிம்மனைக் கண்டு அஞ்சி நடுங்கியதாக பாகவதம் கூறுகிறது. ஆனால், தாய் சிங்கத்தைக் கண்டு ஓடிவரும் சிங்கக்குட்டிபோல பிரகலாதன் நரசிம்மரின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டான். நரசிம்மரும் அவனைக் கண்டு கணப்பொழுதில் கோபம் தணிந்து சாந்த மூர்த்தியாக மாறி விட்டார்.