பதிவு செய்த நாள்
29
ஜன
2021
10:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ஈசான்ய குளத்தில், அருணாசலேஸ்வரர் தைப்பூச தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், ஈசான்ய குளக்கரையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ?தொடர்ந்து, ஈசான்ய குளத்தில், சூல வடிவிலான அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடந்தது.
பின்னர், சிறப்பு அபிஷேகம் நடந்தது. குழந்தை வரம் வேண்டி, அருணாசலேஸ்வரரை பிரார்த்தனை செய்த, திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மகாராஜனுக்கு, அருணாசலேஸ்வரரே குழந்தையாக பிறந்தார் என, தல புராணங்கள் கூறுகின்றன. இதை நினைவு கூறும் வகையில், போரில் வள்ளாள மகாராஜா இறந்துவிட்டதாக, அதன் செய்தியை ஓதுவார், அருணாசலேஸ்வரரிடம் கூறும் நிகழ்வும், பின்பு கறுப்பு துணியில் மூடியவாறு, மேளதாளம் இல்லாமல், அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திரும்பும் நிகழ்வும் நடந்தது. தொடர்ந்து. வரும் மாசி மாதம், மகம் நட்சத்திர தினத்தன்று, வள்ளாள மகாராஜாவுக்கு, அருணாசலேஸ்வரர், துரிஞ்சலாற்றங்கரையில் திதி கொடுக்கும் நிகழ்வு நடக்க உள்ளது.