வால்பாறை: நடுமலை எஸ்டேட் பூமாரியம்மன் கோவிலில், முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
வால்பாறை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட் தெற்கு டிவிஷன், பூமாரியம்மன், காளியம்மன் கோவிலின், 66ம் ஆண்டு திருவிழா, கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவில், நாள் தோறும் அம்மனுக்கு காலை, மாலை சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. கடந்த, 26ம் தேதி மாலை, 3:00 மணிக்கு வெள்ளமலை எஸ்டேட் மாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி கும்பம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நள்ளிரவு, 12:00 மணிக்கு சுவாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதன்பின் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம், 12:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.