வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 21ம் ஆண்டு தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், 6:00 மணிக்கு அபிஷேக பூஜைகள் நடந்தன. காலை, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, 9:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் முருகப்பெருமான் தேவியருடன் கோவிலை வலம் வந்தார்.
அதன்பின், காலை, 10:00 மணிக்கு கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. காலை, 10:15 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டது. விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வரும், 31ம் தேதி மாலை, 4:30 மணிக்கு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பிப். 1ம் தேதி காலை, 9:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து பக்தர்கள் அலகு பூட்டியும், பறவைக்காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு செல்கின்றனர். காலை, 11:00 மணிக்கு அன்னதானம் விழா நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான் தேவியருடன் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழா ஏற்பாடுகளை தைப்பூசத்திருவிழா தலைவர் மயில்கணேஷ், செயலாளர் சரவணன், பொருளாளர் சிந்துசெல்வம் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் வக்கீல்கள் பெருமாள், பால்பாண்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.
உடுமலை மடத்துக்குளம் அருகே, கடத்துாரில் நுாற்றாண்டுகள் பழமையான, ஸ்ரீ ஆனந்த நடராஜர் கோவிலில், தனி சன்னதியில் சுப்ரமணியர் எழுந்தருளி வருகிறார்.
ஆனந்தநடராஜர் கோவிவில், வரும் 1ம் தேதி, தைப்பூசத்திருவிழா நடக்கிறது. அன்று காலை, 10:00 மணிக்கு, சூலத்தேவர் மற்றும் சுப்ரமணியருக்கு, அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது.
மாலை, 5:00 மணிக்கு, மகா தீபாராதனை, பிரசாதம், அன்னதானம் நடக்கிறது. 5:30 மணிக்கு, திருத்தேரோட்டம் நடக்கிறது. பக்தர்கள் பங்கேற்று, சுவாமிகளின் அருள்பெறுமாறு, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.