பதிவு செய்த நாள்
09
பிப்
2021
10:02
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், பாரம்பரிய கலாசார சின்னங்களாக விளங்கும் பெரும்பாலான ஹிந்து கோவில்கள், பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மோசமான நிலை: கடந்த ஆண்டு இறுதியில், பாகிஸ்தானின், கைபர் பக்துன்கவா மாகாணம், தெரி கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில், ஜமாத் உலேமா இ இஸ்லாம் என்ற அமைப்பினரால் இடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம், சோஹப் சுடல் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது.இக்குழு, சக்வாலில் உள்ள கடாஸ் ராஜ் மந்திர், முல்தானில் உள்ள பிரகலாத் மந்திர் உட்பட பல வழிபாட்டு இடங்களுக்குச் சென்று, ஆய்வு செய்து, அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் வழங்கியது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஹிந்துக்கள் வழிபட்டு வந்த பாரம்பரிய கோவில்கள், சீக்கியர்களின் குருத்துவாராக்கள், தற்போது படு மோசமான நிலையில் உள்ளன. மிகவும் பிரசித்தி பெற்ற நான்கு இடங்களில், இரண்டு மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றன. உடனடியாக, தெரி மந்திர், கடாஸ் ராஜ் கோவில்கள், பிரஹலாத் மந்திர், ஹிங்லஜ் மந்திர் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும். ஹிந்து, சீக்கியர் உள்ளிட்ட சிறுபான்மையினர், வழிபாட்டு தலங்கள் அருகே வசித்து, பல்வேறு காரணங்களால் வெளியேறியுள்ளனர். அந்த பகுதிகளில், வழிபாட்டு தலங்களை பராமரிக்கும் பொறுப்பு, இ.டி.பி.பி., என்ற அமைப்பிற்கு உள்ளது.
மாபியா கும்பல்: ஆனால், இந்த அமைப்பு, 365 கோவில்களில், 13 மட்டுமே, தன் நிர்வாகத்தின் கீழ் உள்ளதாகவும், 65 கோவில்களை, ஹிந்துக்களே நிர்வகிப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால், 287 கோவில்களை பராமரிக்காமல், நில, மாபியா கும்பலுக்கு தாரை வார்த்துள்ளது.
இதற்கு, அப்பகுதிகளில், ஹிந்து, சீக்கியர் ஆகியோர் இல்லை என, காரணம் கூறப்படுகிறது. அதில், உண்மையில்லை.சிறுபான்மையினர் அதிகம் இல்லாத பகுதிகளில், குறிப்பாக, ஹிங்லஜ் மாதா மந்திர், ஸ்ரீ பரமஹம்சர் மந்திர், தெரி கிருஷ்ணர் கோவில் ஆகியவை, தொடர்ந்து செயல்பட்டு வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும். இ.டி.பி.பி., புலம் பெயர்ந்த சிறுபான்மையினரின் சொத்துக்களை அபகரிக்கவே ஆர்வம் காட்டுகிறது.
நடவடிக்கை: ஹிந்து, சீக்கியர் ஆகியோரின் நுாற்றுக்கணக்கான சொத்துக்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றை, இந்த அமைப்பு ஆக்கிரமித்துள்ளது.மோசமான நிலையில் உள்ள, சிறுபான்மையினரின் புராதன வழிபாட்டு தலங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.