பதிவு செய்த நாள்
09
பிப்
2021
01:02
கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுரம் கட்டுமான பணி சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஏழுநிலை ராஜகோபுரம் கட்டுவதற்காக 2.86 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. 2016, டிச.,ல் பணி துவங்கி, மூன்று ஆண்டுக்குள் முடிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. பாலசுப்ரமணியம் என்பவர் டெண்டர் எடுத்து, கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், கட்டுமான பணிகளை முடிக்க காலதாமதம் செய்ததாக கூறி, டெண்டரை அறநிலைய துறை அதிகாரிகள் ரத்து செய்தனர்.இதை எதிர்த்து பாலசுப்ரமணியம், சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. அப்போது, இசைவு பொது நடுவரை நியமித்து பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு தரப்பு சம்மதம் கேட்கப்பட்டது. அவர்கள் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, பொது நடுவரை நியமிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இசைவு பொதுநடுவராக (ஆர்பிரேட்டர்) கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஸ்ரீராமுலு நியமிக்கப்பட்டார். இவரது முன்னிலையில், வரும் 17ல் இரு தரப்பு விசாரணை துவங்குகிறது.