பதிவு செய்த நாள்
09
பிப்
2021
03:02
சென்னை : அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்கு, தொல்லியல் அறிஞர் நாகசாமியிடம் ஆலோசனை கேட்க, வல்லுனர் குழு, அடுத்த வாரம் சென்னை வர உள்ளது.
தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனரும், மூத்த தொல்லியல் அறிஞருமான நாகசாமி, பாபர் மசூதி வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தார். இவர், பாபர் மசூதி கட்டுமானத்துக்கு கீழ், ராமர் கோவில் இருந்ததற்கான சான்றுகளை சமர்ப்பித்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சாட்சியளித்தார். அந்த வழக்கு வெற்றிபெற, இவரின் சாட்சியமும் முக்கிய பங்காற்றியது. இந்நிலையில், அயோத்தி ஸ்ரீராம ஜன்ம நிர்மான அறக்கட்டளை நிர்வாகியும், பொருளாளருமான கோவிந்த தேவகிரி சுவாமிகள், நேற்று சென்னை வந்தார். தொல்லியல் அறிஞர் நாகசாமியின் உதவியைப் பாராட்டி, சால்வையும், முத்து மாலையும் அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவர், கோவில் கட்டுமானம் குறித்த புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களைக் காட்டி, கட்டுமானம் குறித்து விளக்கினார். மேலும், கட்டுமானம் குறித்த ஆலோசனைகளை பெற, தலைமை ஸ்தபதி உள்ளிட்ட கட்டடக்கலை வல்லுனர்கள், அடுத்த வாரம் சென்னை வந்து, நாகசாமியை சந்திக்க உள்ளதாகவும், கோவிந்த தேவகிரி சுவாமிகள் தெரிவித்தார்.