பதிவு செய்த நாள்
09
பிப்
2021
05:02
புதுக்கோட்டை : மொய் விருந்து விழா மூலம் வந்த, 31 லட்சம் ரூபாயை, சிவன் கோவில் கட்ட நன்கொடை வழங்கிய குடும்பத்துக்கு பாராட்டு குவிகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலவேலாயுதம், 54; கடந்த, 18 ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். பாலவேலாயுதம் சார்பில், அவரது மகன் ரெங்கேஸ்வரன் மற்றும் குடும்பத்தினர், நெடுவாசலில் நேற்று முன்தினம் மொய் விருந்து நடத்தினர்.இந்த மொய் விருந்தில், 31 லட்சத்து, 64 ஆயிரத்து, 171 ரூபாய் வந்தது. இதை அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிவன் கோவில் கட்டுமான பணிக்காக, கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினர். ஏற்கனவே இக்கோவில் கட்டுமான பணிக்கு, பால வேலாயுதம், 16 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார். இவரது குடும்பத்தினரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.
ரெங்கேஸ்வரன் கூறியதாவது:என் தந்தை தீவிர சிவன் பக்தர். எங்கள் ஊரான நெடுவாசலில், சிவன் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. என் தந்தையின் விருப்பப்படி, எங்களுக்கு மொய் விருந்து மூலம் வந்த, மொத்த பணத்தையும், சிவன் கோவில் கட்ட, நிதியாக வழங்கினோம்.இவ்வாறு, அவர் கூறினார்.