பதிவு செய்த நாள்
02
மார்
2021
11:03
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி நடப்பதால், இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுமா என, பக்தர்கள் இடையே சந்தேகம் எழுந்துள்ளது.
கோவில்களில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, 2009ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால், 2018 பிப்., 2ல் நடந்த தீ விபத்தில் சேதமடைந்த, வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணி நடப்பதால், இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இம்மண்டப சீரமைப்பு பணி, 2023ல் தான் முடியும். அதுவரை கும்பாபிஷேகம் நடத்துவது சாத்தியமில்லை. வீரவசந்தராயர் மண்டபத்தை மட்டும் தவிர்த்து நடத்தவும் முடியாது. பக்தர்களும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் கும்பாபிஷேகம் என்பது, கோவில் முழுதும் திருப்பணிகள் முழுமையாக முடிந்த பிறகே நடத்தப்பட வேண்டும் என்பது, ஆகம விதி. நிர்வாகம் தரப்பில் கேட்ட போது, ஏற்கனவே, 2021 - 22ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகள் தாமதமாகும் பட்சத்தில், தக்கார், பட்டர்கள், அதிகாரிகளுடன் ஆலோசித்து, எப்போது நடத்துவது என முடிவு செய்யப்படும் என்றனர்.
36 கடைகளை திறக்க அனுமதி: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கடைக்காரர்கள் சங்க தலைவர் ராஜுநாகுலு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சங்க உறுப்பினர்கள் குங்குமம், மஞ்சள், பூ, பூஜை பொருட்கள், செயற்கை நகைகள், புத்தகங்கள் விற்பனை செய்ய, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கொரோனா ஊரடங்கால், 2020 மார்ச் முதல் கடைகள் மூடப்பட்டன.
எங்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. ஊரடங்கு தளர்வால், மாநிலத்தில் பிற கோவில்களில் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கடைகளை திறக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டார்.நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்தார். கோவில் தரப்பில், 72 கடைகளில், 36 கடைகளை நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதிக்கத் தயார். மற்ற, 32 கடைகள் சிற்பங்களின் பாதுகாப்பிற்கு இடையூறாக இருப்பதால், அவற்றை திறக்க அனுமதிக்க வாய்ப்பில்லை என, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.