பதிவு செய்த நாள்
02
மார்
2021
09:03
பேரூர்: வெள்ளிங்கிரி மலையேற்றம் துவங்கியுள்ளதால், வசதிகளை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். பூண்டி வெள்ளிங்கிரி கோவில், மலையேற்றத்துக்கு வனத்துறை அனுமதி வழங்கியதையடுத்து, சிறப்பு பூஜைகளுடன் கிரிமலை பாதை, நேற்று காலை திறக்கப்பட்டது.
பக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். வரும், 11ம் தேதி, மஹா சிவராத்திரி விழா என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.இது போன்ற நிலையில், முடிகாணிக்கை பகுதியில் உள்ள, 16 அறைகள் கொண்ட பொதுக்கழிப்பிடம் புதர் சூழ்ந்துள்ளதுடன், தண்ணீரும் வருவதில்லை. ரூ.4.25 லட்சத்தில் கட்டிய சுத்திகரிப்பு நிலையத்தில், குடிநீர் வருவதில்லை.இது குறித்து, கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, பாலம் பணியின் போது, சேதமடைந்த தண்ணீர் குழாய் சீரமைக்கப்படுகிறது. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திர பழுதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். சிவராத்திரிக்கு சில நாட்களே உள்ளதால், அனைத்து வசதிகளையும் விரைந்து செய்ய வேண்டும். அத்துடன், பக்தர்கள் முகக்கவசம் அணிவது, பிளாஸ்டிக் மற்றும் தீப்பிடிக்கும் பொருட்களை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதையில் மரங்கள்கிரிமலை பாதையின், இரண்டாவது மலையில், மூன்று மரங்கள் விழுந்து கிடக்கின்றன. பக்தர்கள் அந்த மரங்களின் மீது, ஏறிதான் செல்ல வேண்டியுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மரங்களை அப்புறப்படுத்த, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.