பதிவு செய்த நாள்
02
மார்
2021
01:03
மாமல்லபுரம்; மாமல்லபுரம், நிலத்தடியில் புதையுண்ட கிருஷ்ணர் குடைவரை மண்டப படிகள் வெளிக்கொணரப்பட்டது.மாமல்லபுரத்தில், பல்லவர் கால சிற்பங்களில், கிருஷ்ணர் - கோவர்தனகிரி சிற்பம் குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணர், பக்தர்கள் மழையில் நனையாமல் பாதுகாக்க, மலையை குடையாக பயன்படுத்திய காட்சி, புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்திற்கு, விஜயநகர ஆட்சியில், மண்டபம் அமைக்கப்பட்டது. தரைப்பகுதியிலிருந்து, சில அடிகள் உயரத்தில், மண்டபம் அமைந்து, ஐந்து படிகள் உண்டு. படிகளின் பக்கவாட்டில், அழகிய சிற்பங்கள் உள்ளன.பல ஆண்டுகளுக்கு முன், சாலை மட்டம் உயர்ந்து, அதற்கேற்ப மண்டப பகுதியில், தரைமட்டம் உயர்த்தி, புல்வெளி அமைக்கப்பட்டது. அப்போது, மூன்று படிகள் புதையுண்டன.சிற்பங்களுடனான படிகள் காட்சி கருதி, முந்தைய நிலைக்கே, தற்போது அகழ்ந்து, புதையுண்ட படிகள் வெளிப்படுத்தப்பட்டது. பயணியர் நிற்க, கற்தளமும் அமைக்கப்பட உள்ளது.