பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் மற்றும் கருப்பணசுவாமி கோயில்களில் மகா சிவராத்திரி விழா நடந்தது. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் வாயிலில் அருள்பாலிக்கும் காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமிக்கு நேற்று மாலை 6:00 மணிக்கு வைகை ஆற்றிலிருந்து பக்தர்கள் சந்தன குடம் ஏந்தி வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்த பக்தர்கள் இரவு 7 மணிக்கு கோயிலை அடைந்தனர். தொடர்ந்து கருப்பண சுவாமிக்கு இளநீர், பால், சந்தன அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
*பரமக்குடி ஈஸ்வரன் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர், நயினார்கோவில் நாகநாதசுவாமி உள்ளிட்ட சிவாலயங்களில் நான்கு கால யாக பூஜைகள், அபிஷேகம் நடந்தது.
*பரமக்குடி காக்கா தோப்பு பதினெட்டாம்படி கருப்பன சுவாமி, எமனேஸ்வரம் சித்தி விநாயகர் கோயில், வண்டியூர் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில்களில் மகாசிவராத்திரியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதேபோல் அனைத்து கிராமங்களில் உள்ள பரிவார தெய்வங்கள், காவல் தெய்வங்கள் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.