பதிவு செய்த நாள்
13
மார்
2021
11:03
சபரிமலை:பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவுக்காக, சபரிமலை நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும், 10 ஆயிரம் பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்படுகின்றனர்.
கேரள மாநிலம், சபரிமலையில், நாளை மாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றுகிறார். வேறு பூஜைகள் கிடையாது. இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.நாளை மறுநாள் அதிகாலை, 5:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டதும், தந்திரி கண்டரரு ராஜீவரரு நெய் அபிஷேகத்தை துவங்கி வைப்பார். பின், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை நடைபெறும்.மார்ச், 18 மாலை, கொடிபட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
19 காலை, 7:15 முதல், 8:00 மணிக்குள், பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றம் நடைபெறும். திருவிழா நாட்களில் உற்சவபலி, சீவேலி தினமும் நடைபெறும். மார்ச், 27 இரவு, சரங்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 28ம் தேதி காலை, பம்பைக்கு ஆராட்டு பவனி புறப்படும். ஆராட்டு முடிந்து, இரவு சன்னிதானத்துக்கு பவனி திரும்பியதும் திருக்கொடி இறக்கப்பட்டு, விழா நிறைவு பெறும். தொடர்ந்து, நடை அடைக்கப்படும்.
ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும், 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள், 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டும். அடுத்து சித்திரை விஷூ பூஜைகளுக்காக ஏப்., 10ம் தேதி மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கும்.