பதிவு செய்த நாள்
06
ஜூன்
2012
10:06
சேலம்: ஏற்காடு, சேர்வராயன் கோவிலில், வைகாசி தேரோட்டம் நடந்தது. சேலம் மாவட்டம், ஏற்காடு அடுத்த மஞ்சக்குட்டை கிராமம், சேர்வராயன் மலையில் எழுந்தருளியுள்ள சேர்வராயன் ஸ்வாமி வைகாசி உற்சவ விழா, கடந்த 28ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை சிறப்பு தீபாராதனைகள், பூஜைகள் நடந்தது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை ஸ்வாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், பூஜைகள் நடந்தது. ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 2.30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில், காவேரித் தாயுடன் சேர்வராயன் ஸ்வாமி எழுந்தருளினார். தொடர்ந்து, தேரோட்டம் நடந்தது. ஏற்காடு ஒன்றிய சேர்மன் அண்ணாதுரை, துணை சேர்மன் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயன், அழகிரிநாதர் கோவில் தக்கார் முருகன், கவுன்சிலர் மணி முத்து, ஒன்றிய அ.தி.முக., துணை செயலாளர் ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய செயலர் பிலிப்பான் ஆகியோர் தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தேர், மலையைச் சுற்றி வந்து நிலையை அடைந்தது. தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று (6ம் தேதி) மதியம் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பெண் பக்தர்கள் அவதி ஆண்டுதோறும் நடக்கும் வைகாசி உற்சவ விழாவில், ஏற்காடு மலையில் உள்ள, 67 கிராமங்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்வர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி செய்யவில்லை. அதனால், பெண் பக்தர்கள் சிரமமடைந்தனர்.