பல்லடம்: அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியுடன், பல்லடம் அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா நிறைவடைந்தது. பல்லடத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில், 46வது குண்டம் திருவிழா நடந்தது. கடந்த 10ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் துவங்கி, கொடியேற்றம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து, 13ம் தேதி காலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. குண்டம் இறங்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, கோவில் பூசாரிகள் மட்டும் பங்கேற்றனர். பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். திருவிழா நிறைவடைந்ததை முன்னிட்டு, நேற்று முன்தினம் கொடி இறக்குதல், வாஸ்து சாந்தி, மற்றும் மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, குதிரை வாகனத்தில் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளிய ஸ்ரீஅங்காளம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.