பதிவு செய்த நாள்
19
மார்
2021
10:03
சென்னை:அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், தமிழக தொல்லியல் துறை அகழாய்வை துவங்கி உள்ளது.
தமிழக தொல்லியல் துறை சார்பில், தமிழகத்தில், ஏழு இடங்களில் இந்தாண்டு அகழாய்வு செய்யப்பட உள்ளன. இதில், அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் எனும் ஊர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ராஜேந்திர சோழனின் தலைநகராக விளங்கியது.இங்கு, ஏற்கனவே, தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வில், ராஜேந்திர சோழனின் அரண்மனை இருந்த தடயங்கள் கண்டறியப்பட்டன.
இந்நிலையில், கடந்த மாதம், இங்கு கள ஆய்வுப் பணிகள் நடந்தன. அதில், தொல்பொருட்கள் இருக்கும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, ஒரு வாரத்திற்கு முன், அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இந்த பணிகள் தற்போது மந்தமாக நடப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. மண் மிகவும் இறுகி உள்ளது. அலுவலர்கள், தேர்தல் பணிக்கான பயிற்சிக்கு செல்வது உள்ளிட்ட காரணங்களால், பணிகள் மெதுவாக நடந்து வருகின்றன. தேர்தலுக்குப் பின், பணிகள் முழுவீச்சில் நடக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.